பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பல்லவப் பேரரசர்



இல்லை. மாமண்டுர் ஏரி மஹேந்திரன் வெட்டுவித்ததாகும்.

4. மஹேந்திரவாடி

இஃது ஆர்க்கோண[1]த்திற்கு அண்மையில் உள்ள சோழசிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்று கல் தூரத்தில் இருப்பது. ஊருக்குப் பின்புறமுள்ள வெளியில் உள்ள சிறிய குன்றில் மஹேந்திரன் குடைவித்த கோவில் அழகொழுகக் காட்சி அளிக்கின்றது. வலப்புறத் தூணில் வடமொழிக் கல்வெட்டொன்று காண்கிறது. உள்ளறையில் பெருமாள் சிலை இருந்தது; இப்பொழுது இல்லை. அக்கோவில் ‘மஹேந்திர விஷ்ணுக்ருஹம்’ எனப்பட்டது. அங்கு இருந்த பழைய ஏரி மஹேந்திரன் எடுப்பித்ததாகும். அங்குள்ள கல்வெட்டில், “நல்லவர் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதுமாகிய அழகிய மஹேந்திர விஷ்னுக்ருஹம்” என்னும் முராரியின் பெருங்கற்கோவில் மஹேந்திரனது பேரூரில் மஹேந்திர தடாகத்தின் கரையில் - பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்” என்பது வெட்டப் பட்டுள்ளது. இதனால் இன்றைய மஹேந்திரவாடி என்னும் சிற்றுார் மஹேந்திரன் காலத்திற் பேரூராக இருந்தது என்பதும், அக்கோவில் மஹேந்திரனால் உண்டாக்கப் பட்ட ஏரியின் கரையில் இருந்தது என்பதும் தெளிவாகும். இன்று கோவில் அருகில் ஏரி இல்லை. அது பழுதுபட்டுப் போய்விட்டது.

5. தளவானூர்

இதுதென் ஆர்க்காடு ஜில்லாவில் இருக்கிறது: பேரணி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே


  1. ‘அரக்கோணம்’ என்பது மருவி வழங்கும் பெயர்.