பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

53



படுகின்றன. அவை உள்ள மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன.


8. திருச்சிராப்பள்ளி மலைக்கோவில்

இக்கோவில், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் போகும் பாதையில் இடப்புறம் குடையப்பட்டுள்ளது. மஹேந்திரன் சைவனாக மாறினவுடன் இங்குப் பெரிய சிவலிங்கம் வைத்துச் சிறப்பித்தான் என்பதைச் சென்ற பகுதியில் கூறினோம் அல்லவா? இங்குள்ள சுவர்களில் மிக அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றிற் சிறந்தது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிறமும் நிலையும் கவனிக்கத்தக்கவை. அது, கங்கையை அணிந்த சிவபிரானே நம் எதிரில் நிற்பது போன்ற காட்சியை அளித்து நிற்றல் வியப்பூட்டுவதாகும். சடையிலிருந்து விழுகின்ற கங்கையை வலக்கையில் தாங்கியும், பூனூலாகப் போட்டுள்ள பாம்பின் தலையை மற்றொரு கையாற் பிடித்தும், உருத்திராக்ஷ மாலையைப் பிறிதொரு கையில் பற்றியும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் சிவபெருமான் நிற்கின்ற காட்சி காணத்தக்கது. கி.பி.7-ஆம் நூற்றாண்டில் நமது தமிழகத்தில் இவ்வளவு அருமையாகக் கற்களில் உருவங்களை அமைக்கும் ஆண்மையாளர் இருந்தனர் எனின், நம் முன்னோர் நாகரிகச் சிறப்பை என்னென்பது!

9. சமணர் குகைக்கோவில்

சித்தன்ன வாசல்[1] என்பது புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே


  1. “சித்தானம் -வாஸஹ்” என்பது சிதைந்து ‘சித்தன்ன வாசல்’ என்றாயிற்று. ‘துறவிகள் இருப்பிடம்’ என்பது இதன் பொருள்” என்று அறிஞர் கூறுவர்.