பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

67



நாட்டிலும் சைவத்தைப் பரப்பினார். ஆனால் நரசிம்ம வர்மனோ, தன் பெயருக்கேற்ப, வைணவத்தைப் பேணி வளர்த்தான்.

பல்லவர் - சாளுக்கியர் போர்

புலிகேசி படையெடுப்பு

மஹேந்திரனிடம் தோற்றோடின இரண்டாம் புலிகேசி அவன் இறக்கும்வரை காத்திருந்தான்; அவன் மகனான நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள், பண்பட்ட படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு, பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்.

பல இடங்களிற் போர்

புலிகேசி முன்போலவே காஞ்சிக்கருகில் வந்துவிட்டான். பகைவனை வேறு இடங்களில் தாக்காது, தன் பெருநாட்டிற்குள் நன்றாகப் புகவிட்டுப் பிறர் உதவி அவனுக்குக் கிடைக்காதபடி செய்து, சுற்றிவளைத்துக் கொண்டு போரிடலே தக்கது என்ற முறையை முன்னர் மஹேந்திரன் கையாண்டான். சாளுக்கிய சேனை நெடுந்துாரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே அல்லவா? வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ? காஞ்சியை அடுத்துள்ள பரியலம், மணிமங்கலம், சூரமாரம் என்னும் இடங்களில் போர்கள் நடைபெற்றன. போரின் கடுமை கூறுந்தரத்ததன்று. முடிவில் சாளுக்கியன் படை நிலைதளர்ந்து வடமேற்கு நோக்கி ஒடத் தொடங்கியது.