பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

பல்லவப் பேரரசர்



சாருதேவி என்பவள் நாராயணன் கோவிலுக்கு நிலதானம் செய்ததை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா? இடைக்காலப் பல்லவருள் விஷ்ணுகோபன் முதலியோர் தங்களைப் பரம ‘பாகவதர்’ என்று கூறிக்கொண்டனர். சிம்ம விஷ்ணு பாகவத உத்தமன். அவன் மகனான மஹேந்திரன் சைவன். அவன் மகனான நரசிம்மவர்மன் பரம பாகவதன். பல்லவ் அரசருள் பெரும்பாலும் தந்தை சைவனாயின் மகன் வைணவனாக இருந்துவந்தான் என்னலாம். பல்லவ அரசர் இந்த இரண்டு சமயங்களையே தம் கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர்.

சைவம்

சைவ சமயம் பல்லவர் காலத்தில் பெருஞ்சிறப்புற்றது. மஹேந்திரன் கால முதல் பல்லவப் பெருநாட்டில் சைவம் புத்துயிர் பெற்று வேரூன்றித் தழைத்துச் சிறப்படைந்தது. அவன் காலத்தவரான திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களாலும், தீவிரத் தொண்டினாலும், பிரயாணத்தாலும் தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் சைவசமயம் ஆக்கினார். அவருக்கு முனிவரும் பல்லவனும் செய்த கொடுமைகள், அவற்றை அவர் தமது திருத்தொண்டின் உறைப்பாலே வென்றமை ஆகிய செய்திகள் நாடெங்கும் பரவின; மக்கள் திருநாவுக்கரசரைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடினர். அரசனும் சைவனானான் என்றது கேட்ட மக்கள் உள்ளம் சைவத்திற் பாய்தல் இயல்புதானே திரளான மக்கள் சைவத் தொண்டர்கள் ஆயினர். நாடு முழுவதும் சைவப் படையெழுச்சி ஏற்பட்டது. சிவத்தலங்கள் சிறப்படையத் தொடங்கின. அக்காலத்தில் சீகாழியிற் பிறந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர்க்கு உதவியாக இருந்து, சோணாடு