பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பல்லவர் வரலாறு



திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே உள்ள திருவெள்ளறையில் மலை மீது பழைய பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. அம் மலையினடியில் பெரிய குகைக் கோவில் குடையத் தொடங்கி வேலை முடியாமல் நிறுத்தப்பட்டது. குடைந்த அளவு காணப்படும் வேலைப்பாடு நரசிம்மன் காலத்ததென்று கூறலாம். புதுக்கோட்டை யைச்சார்ந்த குடுமியா மலையில் மகேந்திரனது இசையைக் குறிக்கும் கல்வெட்டிற்கு அண்மையில் உள்ள குகைக்கோவில் நரசிம்மவர்மன் காலத்தது. அதன் அமைப்பு மேற்சொன்ன திருச்சிராப்பள்ளிக்குகைக் கோவில் அமைப்புப் போன்றே இருக்கின்றது. புதுக்கோட்டையைச் சேர்ந்ததிருமய்யத்தில் மகேந்திரவன் அமைத்த சிவன் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள வைணவக் குகைக் கோவிலும் நரசிம்மன் அமைத்ததே ஆகும்.[1]

மகாபலிபுரமும் நரசிம்மவர்மனும்

மகாபலிபுரத்தில் மகேந்திரவர்மன் தொடங்கிவிட்ட வேலையை சிற்ப ஓவியக் கலைகளை நரசிம்மவர்மன் தொடர்ந்து நடத்திப் பெருவெற்றி பெற்றான். இவனது வெற்றிக்கு, இவன் கி.பி. 642இல் பெற்ற வாதாபி வெற்றியே சிறந்த காரணம் ஆகும். வாதாபியில் இரண்டர்ம் புலிகேசியின் சிற்றப்பன் ஆன மங்களேசன் அழகுற அமைத்த குகைக் கோவில்கள் பல உண்டு. அவை வேலைப்பாடு கொண்டவை. அவ் வேலைப்பாடு கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பவை. அவற்றைக் கூர்ந்து பார்வையிட்ட நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் அவைபோல அமைத்துள்ளான் என்பது இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நன்கு விளங்குகிறது. இப் பேரரசன் சாளுக்கியர் வளர்த்தகலைகளை நன்குஅறிந்து சிலவற்றை மாதிரிக்கு எடுத்துச் சென்றேனும் அல்லது அவற்றை அமைத்த வல்லுநரை அழைத்துச் சென்றேனும் கோவில்களை அமைத்தான் போலும் என்று எண்ணத்தக்க விதமாக ஒருமைப்பாடு காணப்படுகிறது.


  1. P.T.S Iyengar’s “Pallavas’, Part II, pp. 38-40.