பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பல்லவர் வரலாறு



பல்லவர்க்கே உரியது என்னலாம். அஃது எங்கும் அக் காலத்தில் காணப்படாததாகும். துர்க்கை தன் ஊர்தியான சிங்கத்தின் மீது இவர்ந்து எருமைத் தலைகொண்ட அசுருன் மீது அம்புகளைப் பொழிகின்றான். அவளைச்சுற்றிலும் அவள் படைகள் இருக்கின்றன. அசுரனைக் சுற்றிலும் அவன் படைகள் இருக்கின்றன. இப் படைகளைப் பொறித்ததால், இக் காட்சி சிறப்படைந்துள்ளது. இக் காட்சியை அமைத்த சிற்பிகள் சிறந்த அறிஞர் ஆவர். இத்தகைய சிறந்த காட்சிகாணல் அருமையே ஆகும். இது பல்லவர்க்குரிய தனிச் சிறப்பு என்றே கூறலாம்.[1]

(2) மண்டபங்கள் - கோவில்களே:- மகாபலிபுரத்தில் ‘மண்டபங்கள்’ என்று கூறப்படுபவை மண்டபங்கள் அல்ல. அவை கோவில்களே ஆகும். ஒவ்வொன்றிலும் இறை உள்ளிடம் (மூலத்தானம்) இருக்கின்றது. அந்த இடங்களில் சிவலிங்கம் இருந்ததாம். இப்பொழுது வேலைப்பாடு கொண்டு காணப்படும் மண்டபம், உள்ளிடத்திற்கு ‘வெளி மண்டபம்’ ஆகும். எனவே, மண்டபங்கள் எனப்படுபவை அனைத்தும் கோவில்களே என்பதில் ஐயமில்லை. இதனை அறியாத பாமர மக்கள் ‘மண்டபம்’ என்றும், அங்குள்ள சிற்பங்கள் நோக்கி, இது ‘மகிடாசுர மண்டபம்’, ‘இதுவராக மண்டபம்’, ‘இது திரிமூர்த்தி மண்டபம்’ என்றும் பெயர் இட்டனர். இவற்றையே ஆராய்ச்சியாளரும் குறித்தனர். ஆதலின், இப்பெயர்கள் இன்றளவும் தவறாகவே வழங்குகின்றன.

(2) ஒற்றைக்கல் கோவில்கள்

மகேந்திரன் குகைக் கோவில்களை அமைத்தான். அவனைப் பின்பற்றிய நரசிம்மவர்மன் தன் பெயரை நிலைநாட்ட, ஒரு கல்லையே கோவிலாக அமைக்கும் புதிய வேலையில் இறங்கிப் பெருவெற்றி பெற்றான். இவை கோவில்கள் என்பதை அறியாத பாமர மக்கள், தேர்கள் என்றும். ஐந்து கோவில்கள் ஒரே வரிசையில் இருத்தல் கண்டு. பாண்டவர் தேர்கள் என்றும் பெயரிட்டனர்.


  1. Heras’s “Studies in Pallava History’ pp.86-87.