பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

பல்லவர் வரலாறு



கி.பி. 12ஆம் நூற்றாண்டினர் ஆயினும், அவர் வரைந்துள்ள நூலில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் அந்தந்த அரசர் முதலியோர் காலத்தனவாகவே இருத்தல் காணத்தக்கது. சேக்கிழார் பிறரைப்போல வாயில் வந்ததைப் பாடிச்செல்பவர் அல்லர். இதனை நன்கு உணரின் நெடுமாறன் நெல்வேலியில் யாருடன் சண்டையிட்டான்? - எப்படிச் சண்டையிட்டான்? - எப்பொழுது சண்டையிட்டான்? என்பன நன்கு விளங்கும்; ‘புரியவில்லை புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று வரலாற்று ஆசிரியரால் கைவிடப்பட்ட நெல்வேலிப்போரின் விவரங்கள் அத்துணையும் தம் காலத்துக் கிடைத்த தக்க சான்றுகளைக் கொண்டு சேக்கிழார் பெருமான் விளக்கி இருத்தல் தெளிவுற விளங்கும்.

நெல்வேலிப் போர்

“நெடுமாறன் சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட பிறகு, சேயபுலத் தெவ்வர் (நெடுந் தூரத்திலிருந்து வந்த பகைவர்) தம் கடல்போன்ற கரிகளுடனும் பரிகளுடனும் வீரருடனும் அமர் வேண்டிப் (தாமாகவே) பாண்டியனை எதிர்த்தனர். பாண்டியன் அவர்களை நெல்வேலியில் எதிர்த்தான்,” என்று தொடங்கிய சேக்கிழார், 5 பாக்களில் இருதிறத்தாரும் போரிட்டத்தை அழகாக விளக்கியுள்ளார். அப்போர் இருபெருவேந்தர் போராகவே காண்கின்றது. மேலும் அந்த வருணனையைப் பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் பட்டயத்தில் காணப்படும் பெருவன நல்லூரில் நடந்த போர் வருணனையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பெருஞ்சுவை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இங்ஙனம் போர் வருணனை செய்த பெரும்புலவர் இறுதியில், “பாண்டியன் படைக்கு ஆற்றாமல், வடபுலத்து முதல் மன்னர் (First rate King of the north) படை சரிந்தது; நெடுமாறன் வாகை புனைந்தான் என்று கூறி முடித்துள்ளார்.[1]


  1. நெடுமாறர் புராணம் செ:3-7