பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பல்லவர் வரலாறு



பல்லவர்-சாளுக்கியர் போர்

விநயாதித்தன் கங்கபாடியைத் தாக்கினான். அப்பொழுது கங்கபாடியை ஆண்டவன் முதலாம் சிவமாறன் (கி.பி. 679-726) என்பவன்.[1] விநயாதித்தன் கங்கபாடியைத் தனதாக்கிக் கொண்டு. சிவமாறனைத்தனக்கு அடங்கி இருக்குமாறு செய்தான். அங்கிருந்து நேரே பல்லவ நாட்டைத் தாக்கினனோ. அல்லது முதலில் வடக்கிலிருந்து தாக்கினனோ தெரியவில்லை. போர் எங்கு எப்பொழுது நடந்தது என்பதும் தெரியவில்லை. விநயாதித்தன் ‘தந்தை கட்டளைப்படி’ படையெடுத்திருத்தல் வேண்டும்; இராசசிம்மன் அவன் கல்வெட்டுகள் கூறுமாறு போரில் அஞ்சாது பொறுமையுடன்நின்று போரிட்டு, இறுதியில் வெற்றிபெற்றிருத்தல் வேண்டும், வேறு சான்றுகள் இன்மையால், இந்த அளவே இப்பொழுது கூறுதல் கூடும். ஆயினும், ஒன்று மட்டும் வற்புறுத்திக் கூறலாம். அஃதாவது இப் போர்மிகவும் கடுமையாக நடந்திருத்தல் வேண்டும் என்பது. என்னை? இராசசிம்மன் கல்வெட்டுகள் அவனைப் போரில் மனவுறுதி உடையவன்; போரில் களைப்படையாதவன் எனப் பலபடக் கூறலானும் (போருக்குப் பின்) கடுமையான பஞ்சம் - இவன் காஞ்சிநகரத்தையே துறக்கும் படியான கொடிய வற்கடம் - மூன்று ஆண்டுகள் இருந்தமையாலும் என்க. வற்கடம் இவனது ஆட்சித்துவக்கத்திலேயே வந்துவிட்டதால், இப் போரும் இவன் பட்டம்பெற்ற ஆண்டிலேயே நடந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.

போரின் பயன்

இப் போரினால் சாளுக்கியனுக்கும் நன்மை இல்லை. என்னை? விநயாதித்தன் எந்த நன்மையும்பெற்றதாகச்சாளுக்கியர் பட்டயங்கள் குறிக்காமையின் என்க. பல்லவனும் பெற்ற நன்மை ஒன்றுமில்லை. இவனுக்குமுன் இருந்த அரசர்கள் ஆற்றிய ஒயாப் போர்களால் துன்புற்ற பல்லவநாடு, இவனது ஆட்சியின் தொடக்கத்திலும்


  1. M.V.K.Rao’s “Gangas of Talakad,’ p.49.