பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

157



இருக்கின்றன. இறையிடத்தைச் சுற்றியுள்ள வெளிச்சுவரில் சிறு கோவில்கள் பல காணப்படுகின்றன. இறையிடத்துக்கு மேல் கண்ணைக் கவரும் அழகிய கும்பம் இராசசிம்மன் நினைவையும் பல்லவர்காலக் கட்டடக் கலையையும் உணர்த்தி நிற்கின்றது.

முன்கோயில்

வாயிலுக்கு எதிரே உள்ள சிறிய கற்கோவில் பல படிக்கட்டுகளை உடையது.உயர்ந்த இடத்தில் பெரிய லிங்கம் நான்கரை அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அது பதினாறு பட்டைகளைக் கொண்ட லிங்கம். லிங்கம் உள்ள இடத்திற்குப் பின்னுள்ள சுவரில் அம்மையப்பர் அரியணையில் அமைந்துள்ள கோலம் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. உள்ளறையை அடுத்த வெளி மண்டபத்தின் வலப்புற இடப்புறச் சுவர்களில் சிவபெருமானைக் குறிக்கும் பெரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று சடையை விரித்த சிவனார் உருவம்; மற்றொன்று சிவனார் எட்டுக் கைகளுடன் ‘லதாவ்ரிசிக’ நடனம் செய்தலைக் குறிப்பது அஃதாவது, இடக்கால் முன்புறம் மடித்து ஊன்றி, வலக்கால் பின்புறம் மடித்துத்துக்கி, இடக்கைகளில் ஒன்றுதலை முடிக்குமேல் தூக்கியவண்ணம் நடிக்கும்பொழுது இடக்கைகள் இரண்டு பந்தை எறிந்து பிடித்தல். இது விந்தையான நடனவகை ஆகும். இந்த நடனவகையையே இக் கோவில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. இவ் விந்தையான நடனவகையே இராசசிம்மனைக் களிப்பித்தது போலும் இக் கோவிலின் புறச்சுவரில் அழகிய லிங்கங்கள், யாழ் (வீனை) வாசிக்கும் விஞ்சையர்கள், தக்கிணாமூர்த்தி, எட்டுக் கைகளை உடைய அகோர வீரபத்திரர் முதலியவரின் பல உருவங்கள் பொலிகின்றன. லிங்கத்திற்குப் பின்னுள்ள புறச்சுவரில் அழகிய அம்மை அப்பர் அரியணைமீது அமர்ந்துள்ள கோலம் சால அழகியது; இருவருக்கும் இரண்டு குடைகள் கவிக்கப்பட்டுள்ள இச் சுவருக்கு மேலுள்ள கும்பத்தில் சிவனாரது யானைக்கை நடனம் நேர்த்தியாக ஒவியஞ் செய்யப்பட்டுள்ளது. கும்பத்தின் ஏனைய பக்கங்களிலும் பிறநடன வகைகள் காட்டப்பட்டுள்ளன.