பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

159



உள்ளறை மண்டபப் புறச்சுவர்

இறையிடத்துச் சுற்றிலும் சுவரில் சிறு கோவில் அமைப்பு பல இடங்களில் உள்ளது. ஒருபுறம் சிவனார் நடனம் அல்லது அமர்ந்த கோலம் அல்லது வேறொரு கோலம் காணப்படுகிறது. அதன் இரு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் பிரமன் - நாமகள், திருமால் - திருமகள் இவர்கள் சிவனாரை வணங்குதல் போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. ஊர்த்துவத் தாண்டவத்தைக் குறிக்கும் சிற்பங்கள் சில உள. நந்தி நடனம், கணங்களின் நடனம், விஞ்சையர் யாழ் வாசித்தல் முதலியன காணலாம்.[1] மண்டபச் சுவரில் நீண்ட வடிகாதுடைய ஆண் உருவம் தலைமீது முடிதாங்கிஉள்ளது. அதற்கு இருபுறத்தும் இரண்டு பெண் உருவங்கள் உள்ளன. கீழே ஓர் ஆண் உருவம் (மகன்?) இருக்கிறது. இச் சிற்பம் இராசசிம்மன் குடும்பத்தைக் குறிப்பதா என்பது விளங்கவில்லை. இதனை அடுத்துப் பதினாறு கைகளையுடைய காளி சிங்கத்தின்மீதுள்ள கோலம் அழகாகச் செய்யப்பட்டுள்ளது.

சிறு கோவில்கள் 58

திருச்சுற்றுப் பாதையை அடுத்த கோவில் மதிற் சுவர் உட்பக்க முழுவதும் சிறு கோவில்கள் 58 உள்ளன. இரண்டு கோவில்கட்கு இடையில் சுவரில் அம்மனைக்குறிக்கும் பல திறப்பட்ட சிற்பங்களே பலவாகக் காண்கின்றன. சில அம்மை அப்பரைக் குறிப்பன. அம்மன் இடக்கையில் கிளியேந்தி அமர்ந்துள்ள நிலை கீழே இரண்டு யானைகளின் தோற்றம்-தோழிப்பெண் தோற்றம் இவைகண்ணைக் கவர்வனவாக உள்ளன. சிறு கோவில்கள் எனப்படும் மாடங்களில் பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக யமனை உதைத்தவரலாறு, பரமன் - பார்த்திபன் போர், இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, நால்வர்க்கும் அறம் உரைத்த காட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழிபெற்ற


  1. இவை பற்றிய விளக்கத்தை, ‘இசையும் நடனமும்’ என்ற தலைப்பிற் காண்க.