பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணத் திருப்பதிகள்

167



இரண்யவர்மன்

கொற்றங்குடிப்பட்டயம், இரண்யவர்மன் அரசனாக இருந்தான் என்று கூறலும், தண்டன் தோட்டப் பட்டயம் இரண்யவர்மன் பெருவீரன் - பகைவரை விரட்டியவன் என்று பலபடக் கூறி, அவன் அரசன் எனப் பொருள்படுமாறு கூறலும் ஆராயற்பாலன. ஆனால், பல்லவர் வழிமுறை கூறும் பல பட்டயங்கள் அவன் பெயரை (அரசனாக)க் குறிக்கவில்லை. எனவே, இவ் விருவகைப் பட்டயங்கட்கும் மதிப்பைத் தந்து நோக்குழி, ‘இரண்யவர்மன்’ தன் மகனான (பன்னிரண்டு வயதுடைய) பல்லவ மல்லன் பட்டம் பெற்ற கால முதல் வயது வரும் வரை அவன் சார்பாக நின்று, பல்லவ நாட்டைப் பாதுகாத்தான் எனக் கோடலே பொருத்தமுடையதாகும்.

புதிய மரபு ஏன் வந்தது?

சிம்மவிஷ்ணுவின் தம்பி பீமவர்மன். பீமவர்மன் மரபில் வந்தவன் இரண்யவர்மன். இரண்யவர்மன் மகன் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன். இம் மரபினரே 8, 9ஆம் நூற்றாண்டுகள் முடியப் பல்லவ நாட்டை ஆண்டனர். சிம்மவிஷ்ணு மரபினர் ஆட்சி இரண்டாம் பரமேசுவர வர்மனோடு முடிவுற்றுவிட்டது. அவனுக்குச் ‘சித்திரமாயன்’ என்னும் மைந்தன் இருந்தான். ஆயின் அவன் அரசனாகப் பொதுமக்கள் விடவில்லை. ஏன்? பல்லவ நாட்டிற்கு வடமேற்கே பிறவிப்பகைவராக இருந்த சாளுக்கியர் எந்த நிமிடத்திலும் படையெடுக்கலாம் என்னும்பெருங் கவலை இருந்தது. அத்துடன், தெற்கே பெருவீரராக இருந்து நாடு கவரும் வேட்கையில் பாண்டியர் முனைந்திருந்தனர். இங்ஙனம் வடக்கே சாளுக்கியர் அச்சமும் தெற்கே பாண்டியர் அச்சமுமே அமைச்சர் முதலிய பொறுப்புள்ளவர் மனத்தைக் கலக்கிக்கொண்டிருந்தது. இரண்டாம் பரமேசுவர வர்மனே போரில் இறந்தான் என்பது எண்ணவேண்டு வதாக இருக்கிறது.[1] காலஞ் சென்ற அரசனின் மகனான ‘சித்திரமாயன்’ குழந்தையாக அல்லது சிறுவனாக, அல்லது


  1. Dr. N. Venkataramanayya’s article on the Date of Pallava Malla in J.O.R. Madras.