பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பல்லவர் வரலாறு


1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்

தமிழகம்

தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் ‘தமிழை வளர்த்தவர்’, எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது ‘கடைச் சங்கம்’ எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக் காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

பாண்டிய நாடு

பாண்டிய நாடு என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிக் கோட்டங்களும், கீழ்க்கோடிக் கரையும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதன் கோநகரம் மதுரை, காயல், கொற்கை என்பன இதன் துறைமுகங்கள். கொற்கை முத்து எடுப்பதற்குப் பெயர் பெற்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் அமைச்சனாக இருந்த