பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

195



ஆகும். ‘பகைவர்’ என்று பட்டயமும் நந்திக்கலம்பகமும் பன்மையிற் பகர்ந்தமை. இராட்டிரகூட அரசன். அவனுக்கு உட்பட்டுக் குருக்கோட்டையில் ஆண்டசிற்றரசன் ஆகிய இருவரைக் குறிக்கும் எனக் கோடலில் தன்றில்லை. நாம் முன் பலமுறையும் புகழ்ந்து கூறிய சிறந்த கல்வெட்டுப் புலவரான சேக்கிழாரும் கழற்சிங்க நாயனார் (மூன்றாம் தந்திவர்மன்) புராணத்தில் இந்தப் போரைக் குறிப்பாக உணர்த்தல் கவனிக்கத்தக்கது:-

“ஆடக மேருவில்லார் அருளினால் அமரிற் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டு”[1]

இப் போர் ஏறக்குறைய கி.பி. 830இல் நடந்ததெனக் கொள்ளலாம். இப் போரில் வெற்றிபெற்றதால், பல்லவன் தனது வடமாகாணத்தைக் காத்துக் கொண்டான் இராட்டிர கூடனுக்குத் தான் அடங்கியவன் ஆகான் என்பதையும் காட்டிக்கொண்டான்: இதனால், தான் பேரரசன் என்பதையும் நிலைநாட்டினான். இதன் பிறகே கழற்சிங்கனாகிய நந்திவர்மன் தனது நாட்டின் தென்பகுதி யைப்பிடித்துக் கொண்டபாண்டியன்மீது திரும்பினான்.

அமோகவர்ஷன் கங்கனோடு சந்து செய்துகொண்டு பேரழியான ‘சந்திரபலப்பை’ என்ற தன் மகளைக் கங்க இளவரசனுக்கு மணம் செய்து கொடுத்தான். அந்தக்கங்க இளவரசன் பெயர் பூதுகன் என்பது. அவன் ஆட்சிக்காலம் கி.பி.837-870 ஆகும்.[2] அமோகவர்ஷன் தன் மற்றொரு மகளான சங்கா என்னும் இலக்குமி போன்றவளை நந்தி வர்மனுக்கு மணம் செய்து கொடுத்தான்.[3]


  1. செ.2.
  2. இதனை முதன் முதலில் விளக்கிக் காட்டிய பெருமை டாக்டர் மீனாக்ஷி அம்மையார்க்கே உரியது.

    vide her “Ad. and S. Life under the Pallavas’ pp.302-304.

    இராசசிம்மனைக் கழற்சிங்கன் என்று தவறாகக் கருதிச் சுந்தரர் காலத்தைக் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நிறுத்தினோர் பலராவர்.
  3. MVK Rao’s “Gangas of Talakad.’ p. 79.