பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகத மதத்தை ‘இந்து’ மதத்தில் சேர்க்க முயன்றது

201



பாவையார் என்பவள். இவள் தென்னாற்றில் தோற்றோடிய சீமாறன் மகள் என அறிஞர் கருதுகின்றனர். இவள் 75 ஆண்டுகட்குமேல் உயிருடன் இருந்தனள். இவ்வம்மை சிறந்த சிவபக்தி உடையவள்; பல கோவில் திருப்பணிகள் செய்துள்ளவன்.[1]

அரசியல்

நந்திவர்மன் காலத்தில் கடல் வாணிபம் சிறந்து இருந்தது. இவன் பெரிய கடற்படை வைத்திருந்தான். அக்காலத்தில் மல்லை (மாமல்லபுரம்), மயிலை (மைலாப்பூர்) ஆகிய இரண்டும் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக இருந்தன என்பது. இவ்விரண்டையும் ஒருசேரப் பல இடங்களில் நந்திக் கலம்பகம் குறித்துப் போதலால் உணரலாம். காஞ்சிபுரம் தலைநகரமாக விளக்க முற்றிருந்தது.

இவன் வடக்கிலும் தெற்கிலும் பெரும்போர் இயற்றினன் ஆதலின். நாட்டில் வறுமை உண்டாயிற்றுப் போலும்/அதனை இவன் நீக்கினான் என்று கலம்பகம் (செ.11) கூறுகின்றது. அதேகாலத்தில் சோணாட்டில் பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில்[2] காண்கிறோம். ‘அவர் போருக்குப் போயிருந்த பொழுது பெரும் பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்கென வைத்திருந்த நெற் குவியலை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர்’ என வரும் செய்தி உண்மையே என்பதைக் கலம்பகத்தால் உய்த்துணலாம்.

திருப்பணிகள்

இப் பெருவேந்தன் சிற்றூர்களைத் தேவதானமாக விடுத்தான். அவற்றுள் ஒன்று திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றுர் விடப்பட்டது. இவன்திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால் ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்றழைத்துத் தானமாக விடுத்தனன்; திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான்.


  1. Dr. C. Minakshi’s Pallaväs, pp. 161, 162.
  2. பெரியபுராணம் வரலாற்றுக்கு (History) எந்த அளவு துணை செய்கிறது என்பதை அறிய இஃதொரு சான்றாகும்.