பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

211



கூத்தியான ‘அமத்தி’ என்பவள் திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரேச்சுரர் கோவிலில் விளக்கெரிக்க 30 கழஞ்சு ஊர்காற் செம்பொன் (உருகாச் செம்பொன்? செம்பொற் கட்டி?) தந்தனன். அதனை அமிர்த கணத்தார் ஏற்றுக் கொண்டனர்.[1] இவனுடைய வேறொரு கூத்தி ‘பத்திரதானி’ என்பவள் அதே கோவிலில் விளக்குக்காக 30 கழஞ்சு பொன் தந்தாள்.[2]

திருவொற்றியூரில் உள்ள அபராசிதனது 8ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோவிலுக்கு அரிசி, நெய், வாழைப்பழம், சர்க்கரை, காய்கறிகள், பாக்கு வெற்றிலை, இளநீர், ஆணைந்து (பஞ்ச கவ்யம்). சந்தனம், கற்பூரம் என்பனவாங்க உண்டாகும் செலவிற்காக ஒருவன் 50 கழஞ்சு பொன் தந்த செய்தியைக் கூறுகிறது.[3] குமராண்டி குறும்பர் ஆதித்தன் என்னும் தலைவன் சத்தியவேட்டில் உள்ள மதங்ககேசுவரர் கோவிலுக்குத் துறையூர் என்னும் சிற்றுரையும் அதன் வருவாயையும் விட்டமை தெரிகிறது.[4] காடுபட்டிப் பேரரையன் மனைவியான போற்றி நங்கை என்பவள் திருவொற்றியூர் மகா தேவர்க்கு விளக்கெரிக்க 100 ஆடுகளை அளித்தாள்,[5] மேற்சொன்ன கோவிலிலே இரண்டு விளக்குகள் இட மகேசுவரர் மரபினர் பொன் தந்துள்ளனர்.[6] இங்ஙனம் கோவில் திருப்பணிகள் பல இடங்களில் குறைவின்றி நடந்தன.

இக்காலத்து அரசர் (கி.பி. 850-890)

இக்காலத்துக் கங்க அரசர் முதலாம் பிருதிவீபதி (கி.பி. 853-880) இரண்டாம் பிருதிவீபதி (கி.பி. 880-925) என்போர்: இராட்டிரகூட அரசர் அமோகவர்ஷ நிருபதுங்கள் (கி.பி.814-880), இரண்டாம் கிருட்டினன் (கி.பி. 880-912) என்போர்; பாண்டியமன்னர் சீமாறன் சீவல்லபன் (கி.பி. 830-862), வரகுண வர்மன் (கி.பி. 862-880), பராந்தக பாண்டியன்[7] (கி.பி. 880-900) என்பவர்.


  1. 158 of 1912
  2. 161 of 1912
  3. 159 of 1912
  4. 31 of 1912
  5. 32 of 1912
  6. 90 of 1912
  7. R. Gopalan’s “Pallavas of Kanchi, pp.143,144.