பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

பல்லவர் வரலாறு



நென்மலிப் பாக்கத்தையும், மேற்கே மாம்பாக்கத்தையும், வடக்கே கடுவனுரையும், தெற்கே நென்மலைப்பாக்கம், நெல் வாய்ப்பாக்கம், உரத்தூர் என்பனவற்றையும் எல்லைகளாகப் பெற்றிருந்தது என்று பட்டயம் கூறுகிறது. இவ்வூர்களின் பெயர்கள் இன்றுகாணு மாறில்லை. (3) பட்டயப்படி, இறைபுனைச் சேரிக்குக் கிழக்கே காடு இருந்தது. இதற்கு அடையாளமாக அங்குக் ‘காட்டுப்பாக்கம்’ என்னும் சிற்றுர் இன்று இருக்கின்றது. பட்டயப்படி வடக்கே கிரிமாம்பட்டி இருந்தது. அதுவே இன்றைய கிரிமாம் பாக்கம் என்பது. ‘இறைபுனைச்சேரி’ என்னும் பெயர் கொண்ட சிற்றுார் இப்பொழுதில்லை. பட்டயத்தில் உள்ள எல்லைகளை நோக்க இன்றைய பின்னாச்சி குப்பம் என்பதே அக்கால இறைபுனைச் சேரியாக இருந்திருக்கலாம் என்பது உய்த்துணரலாம்.[1]

பாகூர்ப் பழம்பதி[2]

இன்றுள்ள பாகூர் (வாகூர்), நெடுவழிக்கு இரண்டு கல் தொலைவில் இருக்கின்றது. நெடுவழிக்கு மறுபுறத்தில் பெருமான் கோவிலும் பார்ப்பனச்சேரி ஒன்றும் பழங்காலத்துக் குளம் ஒன்றும் பிற சிதைவுகளும் இருக்கின்றன. இன்றைய பாகூர் சிற்றுர் ஆகும். அதன்கண் உள்ள சிவன் கோவில் பழைமையானது. அங்குக் கல்வெட்டுகள் பல இருக்கின்றன. பாகூர் பட்டயத்தை நோக்க, அங்கிருந்த கல்லுர்ரி, பல்லவர் காலத்தில், தென் பல்லவ நாட்டிற்கு அமைந்த பெருங் கல்லூரியாக இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. இதனால் பழைய பாகூரும் மிகப்பெரியதாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தவறாகாது. ஆகவே, சாலைக்கப்பால் உள்ள கோவில், குளம், அக்கிரகாரம் இவற்றையும்


  1. இச் செய்திகளை விளக்கமான படக்குறிப்புடன் எனக்கு உதவியர் புதுவை. ரா.தேசிகப்பிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள் ஆவர்.
  2. நான் புதுவை ரா. தேசிகப்பிள்ளை அவர்களுடன் சென்று இவ்விடத்தைப் பார்வையிட்டேன். இங்குத் தளவாயாக இருப்பவர் ஆராய்ச்சி துறையிற் பெயர்பெற்ற துப்ராய் துரை மாணவர். அவர் உடன் வந்து பல இடங்களைக் காட்டித் தாம் கொண்ட கருத்துக்களையும் விளக்கினார்.