பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

279



(2) இடப்பக்கத்து, நடிகை தன் இடக்கையை லதா விரிசிக நடனத்தில் நீட்டுதல் போலப் பெருமிதத்தோடு நீட்டியுள்ளார்கள். இடக்கால் பின்பக்கம் மடங்கவேண்டும் வலக்கையின் அங்கையும் வீரல்களும் மேல்நோக்கி வளைந்திருத்தல் வேண்டும் இடக்கை லதாவைப்போல நன்றாக நீட்டுதல் வேண்டும். இவை யாவும். அமைந்த நிலையே லதா விரிசிக நடனம் என்பது.

இந்த இரண்டு கூத்தியர் நடன முறைகளிலும் மெய்ப்பாடுகள் பல காணலாம். மெய்ப்பாடுகள் தோன்றும்படி நடித்தலே நாட்டியச் சுவையை மிகுதிப்படுத்துவதாகும். இம்மெய்ப்பாட்டு வகைகள் புலவாகத் தொல்காப்பியத்துள் விளக்கப்பட்டுள்ளன. இந் நடிகையர் முழுப் படமும் சித்தரிக்கப்படாமல் இடையளவு சித்திரிக்கப்பட்டிருத்தல், நட்னக் கலையில் உளதாகும் மெய்ப்பாடுகளை, உணர்த்தலே ஆகும்.

இவ் வியத்தகு ஒவியங்களை வரைந்த பெருமக்கள் சிறந்த நடிகராக இருத்தல் வேண்டும். சிறந்த நடிகரே சிறந்த ஓவியங்களை, உள் உணர்ச்சியோடு தீட்டவல்லவர் ஆவர். இச் சித்தன்னவாசல் சித்திரங்கள் தீட்டப்பெற்ற காலத்தில் பல்லவ நாட்டில் ஓவியம் வல்லாருள் பெரும்பாலர் சிறந்த நடிகராகவும் இருந்தனர் எனக்கோடல் பொருத்தமே ஆகும். பக்தியிற் கட்டுண்டு, இசைக் கலையை நன்குணர்ந்த திருநாவுக்கரசரும் நடனக்கலை உணர்வை, நன்குடையவர் என்பதை அவருடைய பதிகங்களிலிருந்து அறியலாம். அவர் சிவனாரது நடனத்தில் உள்ளம் வைத்த உத்தமராக இருந்தார்.

“நீல மணி மிடற்றான்....
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே”
“இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”