பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

பல்லவர் வரலாறு



சுபார்சவநாதர் முடிமீது நாகம் ஒன்று படம் விரித்து,நிழல் தருதல் போலச் செதுக்கு வேலை காணப்படுகிறது. உள் அறையில் உள்ள மூன்றில் இரண்டு சிலைகள் முக்குடைகளை உடையன. இச் சிலைகள், அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மகேந்திரன் காலத்துச் சிற்பத் தொழில் இவற்றைக் கொண்டும். சிற்பமாக மாமல்லபுரத்தில் ஆதிவராகர் கோவிலில் உள்ள சிலைகளைக் கொண்டும் நன்கறியலாம்.[1]

நடனமாதர் ஓவியங்கள்

இக்கோவில் தூண்கள்மீதும் மேற்கூரைமீதும் மகேந்திரன் அழகொழுகும் ஓவியங்களைத் தீட்டச் செய்தான். அவற்றுள் அழிந்தன போக இன்று இருப்பவை நேர்த்தியாக இருக்கின்றன. முன்மண்டபத் தூண்கள் இரண்டிலும் மாதர் இருவர் நடனமாடும். நிலையில் தீட்டப்பட்டுள்ளனர். அவர்தம் உருவங்கள் அழகாக அமைந்துள்ளன. கோவிலுக்கு வருபவரை இன்முகம் காட்டி அழைப்பன போல் அவ்வுருவங்கள் வெளி மண்டபத்துண்களில் இருத்தல் சால் அழகியது. வலத்தூண்மீதுள்ள ஓவியம் மற்றதைவிட நன்னிலையில் இருக்கின்றது.

வலத்தூணில் காணப்படும் நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டது. கூந்தல் நடுவில் பிரிக்கப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது. அம்முடிப்புச் சில அணிகளாலும் பல நிற மலர்க் கொத்துக்களாலும் தாமரை இதழ்களாலும் கொழுந்து இலைகளாலும் அணி செய்யப்பட்டுள்ள நேர்த்தி காணத்தக்கதாகும். காதணிகள் கல் இழைக்கப் பெற்ற வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன; கழுத்தணிகள் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. பல திறப்பட்டவை. கையில் கடகங்களும் வளையல் முதலியனவும் காணப்படுகின்றன. வலக்கையின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரங்கள்


  1. "வடமொழித் தொடராகிய ‘சித்தானம் வாசஹ்’ என்பது ‘துறவிகள் இருப்பிடம்’ என்னும் பொருளது. இது பாகதமாய்ச் ‘சித்தன்னவாசல்’ என்று ஆயிற்று” என்று அறிஞர் T.N. இராமசந்திரன் கூறுவர்.