பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

பல்லவர் வரலாறு



இராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்கள். சில ஆண்டுகட்கு முன் காமாட்சி அம்மன் கோவிலிருந்து புத்தர் சிலைகளைத்திருவாளர் கோபிநாதராயர் கண்டெடுத்ததை ஆராய்ச்சி உலகம் நன்கறியும் அன்றோ? மணிமேகலையை நன்கு ஆராய்ந்தவர், காஞ்சியில் பெளத்த இடங்கள் சில வேனும் இருந்தன என்பதை ஒப்புவர். இபூன்-சங், மகேந்திரவர்மன் இவர்தம் நூல்களாலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பெளத்தர் காஞ்சியில் இருந்தனர் என்பதை எளிதில் உணரலாம். எனவே மேற்கூறிய தெருக்கள் இரண்டும் பண்டைக் காலத்தில் சிறப்பாகப் பல்லவர் காலத்தில் புத்தர் வாழ்ந்த இடங்களாக இருந்தன என்னலாம்.

‘சாத்தன் குட்டைத் தெரு’ என்பதொரு தெருவாகும். ‘சாத்தன்’ என்பது ‘சஹஸ்தன்’ என்பதன் மருஉ மொழி. இப் பெயர் புத்தர் பெருமானைக்குறிப்பது. ‘சாத்தனார்’ என்பது மணிமேகலை ஆசிரியர் பெயராதல் காண்க. இதனால், பல்லவர் காலத்திலும் அதற்கு முற்பட்ட சோழர் காலத்திலும் ‘புத்தர்’ போன்ற கடவுளர் பெயர்களைக் குளங்கட்கு இடுதல் மரபு என்பது தெரிகிறது.

பிற தெருக்கள்

யானை கட்டுந் தெரு, பட்டாளத் தெரு, காவலன் தெரு, முதலியன அரசியல் அமைப்பைச் சேர்ந்த தெருக்கள். அவை இன்றும் அப்பெயருடன் வழங்குகின்றன என்பது நோக்கத்தக்கது.[1] பலவகைத் தொழிலாளர் தெருக்கள் பண்டு இருந்தவாறே இன்றும் இருந்து வருகின்றன. அவற்றுள் சில சாலியர் தெரு, சுண்ணாம்புக் காரத்தெரு, நிமந்தக்காரத் தெரு (கொத்தத் தெரு) என்பன. சோலைகள் (இக்கால Park) இருந்த தெருக்கள் சில. அவை திருச்சோலைத் தெரு, மதுரன் தோட்டத் தெரு, தோப்புத் தெரு


  1. திருநெல்வேலியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் இன்றும் ‘பரத்தையர் தெரு’ என்னும் பெயர் கொண்ட தெரு இருப்பதாகக் திரு.செ.தெ. நாயகம் அவர்கள் கூறினார்கள். இப் பண்டைப் பெயர் இன்றளவும் நிலைத்திருத்தல் அருமை அன்றோ?