பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களப்பிரர் யாவர்?

39



அறுபான் மும்மை நாயன்மாருள் ஒருவராகிய கூற்றுவ நாயனார் களப்பிரரே ஆவர். இவரைப்பற்றி நம்பியாண்டார் நம்பி,

"ஒதம் தழுவிய ஞாலமெல்லா மொரு கோலில்வைத்தான்
கோதை நெடுவேல் களப்பாளன் ஆகிய கூற்றுவனே"

என்று கூறுதல்காண்க. ‘இவர் பல அரசர்களைவென்றவர் முடிபுனைய விரும்பித் தில்லைவாழ் அந்தணரை வேண்டினர். அவர்கள், இவர் சோழர் அன்மையின் மறுத்துவிட்டனர். அதனால் இவர் இறைவனை வேண்ட, சிவபெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டி அருளினார் என்பதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது.[1] இவரும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை மற்றொரு நாயனாரான இடங்கழி நாயனார் என்பவரும் இம் மரபினரே. இருவரும் கொடும்பாளுரை ஆண்ட குறுநில மன்னராவர்.[2]

களப்பிரர்-பல்லவர் போர்கள்

கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முனைகையில், அவர்களால் தாக்குண்ட இக் களப்பிரர் அருவா வடதலை நாட்டை விட்டுத் தொண்டை மண்டலத்திற்குள் நுழைந்தனர். இவர்கள் நுழைவால் சோழர் சிற்றரசு தொண்டை மண்டலத்தில் வீழ்ச்சியுற்றது. பல்லவர் தொண்டை நாட்டையும் கைப்பற்ற முனைந்த பொழுது, அவரிடம் போரிட்டுத் தோற்ற களப்பிரர் காஞ்சியை விட்டுப் பாலாற்றுக்குத் தெற்கே சென்று விட்டனர். அதனாற்றான் பப்பதேவன் காலத்தில் பாலாறு பல்லவர் நாட்டின் தென் எல்லையாக இருந்திருந்தால் வேண்டும். பிறகு சிவஸ்கந்தவர்மன் இக் களப்பிரரோடு போரிட்டுத் தென் பெண்ணையாறு வரை பல்லவ நாட்டை விரிவாக்கி இருத்தல் வேண்டும்.[3]


  1. கூற்றுவ நாயனார் புரணாம்.
  2. K.A.N.Sastry’s Cholas, Vol.I. p.150 foot-note.
  3. R.Gopalan’s “Pallavas of Kanchi’, pp.36-37
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/59&oldid=573102" இலிருந்து மீள்விக்கப்பட்டது