பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பல்லவர் வரலாறு



எனினும், இப் பலவகைப் பட்டயங்களையும், கல்வெட்டுகளையும் தொகுத்து அமைதியாக இருந்து ஆராய்ச்சி செய்யின், இக்காலப் பல்லவர் பரம்பரை, அவர் தம் வரலாறு, அவர்கால நாட்டுநிலை முதலியவற்றைப் பேரளவு அறியலாம்.

(2) இவற்றோடு, இக்காலப் பல்லவர் வரலாற்றை அறியப் பெருந்துணை புரியும் புறக்கருவிகளில் முதலிடம் பெறத்தக்கவை. இக்காலத்தே பல்லவர் நாட்டைச் சுற்றிலும் இருந்து அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், கதம்பர், கங்கர், பாண்டியர், முத்தரையர், (களப்பிரர்) பாணர் - இவர் தம் பட்டயங்களும் கல்வெட்டுகளும் ஆகும்.

(3) சைவசமய குரவர் பாடியருளிய தேவாரத் திருமுறைகளும் வைணவப் பெரியார்கள் பாடியருளிய நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாக்களும் பல்லவரைப் பற்றிய குறிப்புகள் தரத்தக்க இலக்கியங்கள் ஆகும்.

(4) கி.பி. 615-630 இல் மகேந்திரர்வமன் வெளியிட்ட மத்தவிலாசப் பிரகசனம், அவந்திசுந்தரீகதா, பாரதவெண்பா, நந்திக் கலம்பகம், பெரிய புராணம் என்பன சிறந்த வரலாற்றுக் குறிப்புகள் கொண்டவையாகும்.

(5) மகாவம்சம்- இஃது இலங்கை வரலாறு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் நரசிம்மர்வர்மன் காலத்தில் இலங்கை நோக்கிப் பல்லவர் படைசென்றமை-இலங்கை அரசனை நீக்கிப்பட்டத்திற்கு உரியவனை அரசனாக்கினமை முதலிய செய்திகள் இதனிற் காணலாம்.

இத்துணைச் சான்றுகளையும் துணையாகக் கொண்டு பிற்காலப் பல்லவர் வரலாற்றை ஒருவாறு காண்போம்.

காசக்குடி, கூரம், வேலூர் பாளையப் பட்டயங்களை ஆராயின், இப் பிற்காலப் பல்லவர் பட்டியல் அடுத்த பக்கத்தில் உள்ளவாறு அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/96&oldid=517552" இலிருந்து மீள்விக்கப்பட்டது