பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * * * * * * * * * பழங்கதைகளும் பழமொழிகளும் புராணங்களும், காப்பியங்களும் தோன்றியபின், மனிதன் இடங்களையும், நிகழ்ச்சிகளையும் அவற்றோடு தொடர்புபடுத்திப் பல புனைகதைகளைப் புனைந்தான். அவற்றில் ராமாயணத்தோடு தொடர்புடைய சில புனைகதைகளைக் காண்போம். அனேகமாக ஒவ்வொரு ஊரிலும் குன்று, ஆறு, பாறை, ஊற்று முதலிய இடங்களைப் புனைகதைகள் மூலம் இராமாயணத்தோடு தொடர்பு படுத்தியுள்ளார்கள். இராமாயணத்தில் அக்கதை இருக்க வேண்டுமென்பதில்லை. தங்கள் ஊருக்குப் பழம்பெருமை தேடிக் கொள்வதற்காக மக்கள் தங்கள் ஊரை இராமாயண நிகழ்ச்சிகளோடோ, இராமாயணக் கதைமாந்தர்களோடோ தொடர்புபடுத்தியிருக்கிறார்கள். முயன்றால் இத்தகைய புனைகதைகளை ஒவ்வொரு ஊரிலும் சேகரிக்கலாம். இவற்றைச் சேகரித்து ஆராய்வதற்கு முன் முயற்சியாகச் சில புனைகதைகளைச் சேகரித்து இக்கட்டுரையில் ஆராய்வோம். இக்கட்டுரை ஒரு சிறிய முயற்சியே. தமிழ்நாடு முழுவதிலும் வழங்கிவரும் இத்தன்மையான புனைகதைகளைச் சேகரிப்பதற்கும் ஆராய்வதற்கும் தூண்டுகோலாக அமைவதற்காகவே இக்கட்டுரையை எழுத எண்ணுகிறேன். இராமாயணக் கதையின் தமிழ் வடிவமான கம்பரது காவியம், ஆரணிய காண்டத்தின் நிகழ்ச்சிகளையும், கதைமாந்தர்களையும் தமிழ் நாட்டில் சில இடங்களோடு தொடர்புபடுத்துகிற கதைகள் ஏராளமாக உள்ளன. இவற்றைக் காவியம் தெளிவாகச் சுட்டிக்காட்டாது. சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது அவனைத் தடுக்க முயன்று போரிட்டு மாண்ட ஜடாயு, அவனைத் தேடிச் சென்ற அனுமான் ஆகிய கதை மாந்தர்களோடு, தமிழ் நாட்டிலுள்ள இடங்கள் புனைகதைகளால் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. நேரடியாக இராமனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ள இடங்களும் உள்ளன. இவை குறித்த கதைகளே மிகப் பலவாக தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. அப்புனைகதைகளில் ஒன்பது கதைகளை இக்கட்டுரையில் காண்போம். 1. ஜடாயு தீர்த்தம் பாளையங்கோட்டைக்கு வடக்கே 2 மைல் தூரத்தில், தாமிரவருணி நதியோரத்தில் வெள்ளைக் கோவில் என்ற மயானம் உள்ளது.