பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனக் கட்டை, ஆகியவற்றை விற்றார்கள். இவர்களுடைய வாணிகம் பண்டமாற்றாக இருந்தது. இவர்களுடைய இயற்கைச் சூழ்நிலை நாகரிகம் பெறுவதற்கு ஏற்றதாக இல்லை.

முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை

மலைகளின் அடிவாரத்தில் உள்ளது முல்லை நிலம். சிறு குன்றுகளும் காடுகளும் காட்டாறுகளும் இங்கே இருந்தன. முல்லைக் கொடிகளும் கொன்றை (சரக்கொன்றை), குருந்து முதலான மரங்களும் இங்கு உண்டு. கானக்கோழி, மயில், முயல், மான் முதலானவை இங்கு இருந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் இடையர், எயினர் (எயினர் - வேடர்.). இடையர் பசுக்களையும் ஆடுகளையும் எருமைகளையும் வளர்த்தார்கள் . அவைகளைக் காடுகளிலும் புற்றரைகளிலும் ஒட்டி மேய்த்தார்கள் . வரகு, கேழ்வரகு ஆகிய தானியங்களைப் பயிரிட்டார்கள் . அவரை , துவரை போன்றவைகளையும் பயிரிட்டார்கள், குளங்களிலிருந்து நீர்ப் பாய்ச்சினார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள் . மழையை எதிர்பார்த்தே பயிர் செய்தார்கள். வரகு, கேழ்வரகு இவற்றை உணவாக உண்டார்கள். பால் தயிர் நெய்களையும் உணவாக உண்டார்கள் ,

இவர்கள் தங்கள் வீடுகளைக் குடில்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வரகுத்தாள், கேழ்வரகுத்தாள்களைக் கூரையாக வேய்ந்தார்கள். இவர்களுடைய வீடுகள், குறிஞ்சி மக்களின் வீடுகளைவிட உயரமாகவும் நன்றாகவும் இருந்தன, பால், தயிர், மோர், நெய்களை விற்றார்கள். இவற்றைப் பெரும்பாலும் பண்ட மாற்றாகவே விற்றார்கள் . முல்லை நிலத்து மக்கள் வாழ்க்கை , குறிஞ்சி நிலத்து மக்கள் வாழ்க்கையை விடச் சற்று உயர்ந்திருந்தது. இவர்கள் அவர்களை விட நன்றாகவும் நாகரிகமாகவும் வாழ்ந்தார்கள்.

மருத நிலத்து மக்கள் வாழ்க்கை

ஏரிகள் அல்லது ஆறுகளைச் சார்ந்திருந்தது மருத நிலம். நிலவளமும் நீர்வளமும் உள்ள மருத நிலத்தில் மண் வளம் மிக்க வயல்களில் நெல்லைப் பயிரிட்டார்கள். எருதுகளையும்,

8