பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் மிளகு மூட்டைகள் தரைவழியாக வந்தன என்று கூறப்படுவதனால், இந்த மிளகு மூட்டைகள் மற்றப் பொருள்களோடு வெளி நாடுகளுக்குக் கப்பலில் ஏற்றியனுப்பப்பட்டன' என்று கருதி வேண்டியிருக்கின்றது.

அரபு தேசத்து அராபியர் பழங்காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்து மிளகை வாங்கிக் கொண்டுபோய் எகிப்து உரோமாபுரி முதலான மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் விற்றனர். கி.மு. முதல் நூற்றாண்டில், யவனர் (கிரேக்கரும் உரோமரும்), அராபியரிடமிருந்து மிளகு வாணிகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்கள் நேரடியாகத் தாங்களே கப்பல்களைச் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்குக் கொண்டுவந்து முக்கியமாக மிளகையும் அதனுடன் மற்றப் பொருள்களையும் ஏற்றிக் கொண்டு போனார்கள். அவர்கள் முக்கியமாக முசிறித் துறைமுகப் பட்டினத்துக்கு வந்தனர். அவர்கள் முசிறியை முசிறிஸ் (Muziri) என்று கூறினார்கள். கி.மு. முதல் நூற்றண்டில் தொடங்கின யவனரின் கப்பல் வாணிகம் கி.பி, மூன்றாம் நூற்றாண்டு வரையில் நடந்தது. யவனர்கள் கிரேக்க மொழியில் அக்காலத்தில் எழுதி வைத்த 'செங்கடல் வாணிபம்' (Periplus of Erithe-rian Sea) என்னும் நூலிலும் பிளைனி என்பார் எழுதிய நூலிலும் யவன-தமிழக் கடல் வாணிபச் செய்திகள் கூறப்படுகின்றன. யவனர்கள் தமிழகத்துக்கு வந்து சேரநாட்டு மிளகையும் கொங்கு நாட்டு நீலக் கல்லையும் பாண்டி நாட்டு முத்தையும் வாங்கிக் கொண்டு போனார்கள்.

யவன வாணிகர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து மிளகை வாங்கிக்கொண்டுபோனதை அக்காலத்தில் நேரில் கண்ட தாயங்கண்ணனாரும் பரணரும் கூறுகிறார்கள்:

'சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி'

(அகம், 149; 8-11)

113