பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேட்டனார் என்று பெயர் பெற்றார். அவர் இயற்றிய பன்னிரண்டு செய்யுட்கள் சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. (அகம், 55, 124, 230, 254, 272, 302 குறும், 185. நற்றிணை, 33, 157, 221, 344, புறம், 329)

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. உணவுக்குச் சுவை அளிப்பது உப்பு. ஆகையால் இது 'வெண்கல் அமிழ்தம்' எனப்பட்டது. ஆதிகாலத்திலிருந்து உப்பு மனிதருக்கு உணவாகப் பயன்படுகின்றது. உணவுக்கு மட்டுமல்லாமல், ஊறுகாய், கருவாடு (உப்புக் கண்டம்) முதலானவைக்கும் உப்பு வேண்டப்படுகின்றது. ஆகவே உப்பை எல்லா நாடுகளிலும் உண்டாக்கினார்கள். தமிழகத்திலும் உப்பு செய் பொருளாகவும் வாணிகப் பொருளாகவும் உணவுப் பொருளாகவும் இருந்து வருகின்றது.

நெய்தல் நிலமாகிய கடற்கரை தமிழ் நாட்டைச் சூழ்த்திருத்தபடியால் ஆங்காங்கே உப்பளங்கள் இருந்தன. ஆகையால் தமிழகத்துக்கு எக்காலத்திலும் உப்புப் பஞ்சம் ஏற்பட்டதேயில்லை, உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைத்தார்கள். பாத்திகளில் பாய்ச்சப்பட்ட கடல் நீர் வெயிலில் ஆவியாகிப் போய் உப்பு பூக்கும். இதுவே 'கடுவெயில் கொதித்த கல்விளை உப்பு' (நற்,345:8) ஏர் உழாமல் உவர் நிலத்திலே உப்பு விளைவித்தபடியால் அவர்கள் 'உவர்விளை உப்பின் உழா உழவர்' (நற், 831:1) என்று கூறப்பட்டார்கள்.

உப்பளங்களில் உப்பு விளைந்த பிறகு உப்பைக் குவியல் குவியலாகக் குவித்து வைத்தார்கள். பிறகு, உப்பை வாங்கு வதற்கு வருகிற உப்பு வாணிகரை எதிர் பார்த்திருந்தார்கள்.

'உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஓகை உமணர் வருபதம் நோக்கி
கானல் இட்ட காவற் குப்பை'

(நற், 331:1-3)

(உவர் - உவர் நிலம், உப்பளம்; உமணர்-உப்புவாணிகர் ; கானல்-கடற்கரை ; குப்பை -குவியல்).

120