பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொற்கைக் கடலில் முத்து உண்டானது போலவே சங்குகளும் உற்பத்தியாயின. பரதவர் கடலில் முழுகிச் சங்குகளை எடுத்தபோது, சங்கு முழங்கி அவருக்குத் தெரிவித்தார்கள்.

'இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு கொற்கை'

(அகம், 350; 11-13)

(வலம்புரி-வலம்புரிச் சங்கு ; பரதவர் - கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள் ; கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில் ; பணிலம் ஆர்ப்ப-சங்கு முழுங்க)

கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள் , இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய்தார்கள்.

‘வல்லோன்
வாளரம் பொருத கோணேர் எல்வளை'

(நற்றிணை, 77: 8-9)

வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக் கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் , இத்தொழில் கூறப்படுகின்றது. 'அரம்போழ் அவ்வள' (ஐங்குறு நூறு, நெய்தல் 106) 'கடற்கோடு அறுத்த அரம் போழ் அவ்வளை' (ஐங்குறு, வளைபத்து 48) 'கோடீர் எல் வளை' (ஐங்குறு, வளைப்பத்து) 'கோடீர் இலக்குவளை' (குறும், 31: 5) (கோடு -சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர்.

'வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்து
வளைகளைத் தொழிந்த கொழுந்து'

(அகம், 24: 1-2)

125