பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சாவக நாட்டுக்குக் கப்பலில் பிரயாணஞ் செய்தபோது, அவனுடைய கப்பல் நாகர்மலைத் தீவுக்கு அருகில்காற்றினால் சாய்ந்து முழுகிப் போனதையும் அவன் ஒருமரத்தைப் பற்றிக் கொண்டு தீவில் கரையேறியதையும் மணிமேகலை கூறுகிறது.

'நளியிரு முந்நீர் வளிகலன் வவ்வ
ஒடிமரம் பற்றி யூர்திரை யுதைப்ப
நக்கசாரணர் நாகர் வாழ்மலைப்
பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்'

(மணி, 16: 13-16)

மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்த கம்பளச் செட்டி என்பவனுடைய மரக்கலம் இரவில் கரையையடைகிற சமயத்தில் கவிழ்ந்தது என்பதை மணிமேகலை கூறுகிறது.

'துறைபிறக் கொழியக்
கலங் கொண்டு பெயர்ந்த அன்றே காரிருள்
இலங்கு நீர் அடைகரை யக்கலக் கெட்டது.'

(மணி, 25: 189-191)

இவ்வாறு நடுக்கடலிலே காற்றினாலும் மழையினாலும் புயலினாலும், இடுக்கண்களும் துன்பங்களும் நேர்ந்தும் அவைகளையும் பொருட்படுத்தாமல் வாணிகர் நாவாய்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாக ஏற்படுகிற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வாணிகருக்குக் கடற் கொள்ளைக்காரராலும் துன்பங்கள் நேரிட்டன. ஆனால், கடற் கொள்ளைக்காரர் கிழக்குக் கடலில் அக்காலத்தில் இல்லை. மேற்குக் கடலிலே (அரபிக்கடல்) கப்பற் கொள்ளைக்காரர் இருந்ததை அக்காலத்தில் சேர நாட்டுத் துறைமுகத்துக்கு வந்து சென்ற யவனர் எழுதியுள்ளனர். துளு நாட்டின் ஏழில் மலைக்கு நேரே, கடலில் இருந்த ஒரு கடல் துருத்தியில் (சிறு தீவு) கடற்குறும்பர் தங்கியிருந்து வாணிகத்தின் பொருட்டு அவ்வழியாக வருகிற கப்பல்களைக் கொள்ளையடித்தனர் 'என்றும் ஆகவே அவ்வழியாகக் கப்பல்கள் போவது ஆபத்து என்றும் பிளைனி என்னும் யவனர் எழுதியுள்ளனர்.

43