பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்குக் கடல் வழியே வந்து வாணிகஞ் செய்தார்கள். பிறகு இந்தியாவில் மேற்குக் கரைத் துறைமுகங்களுக்கும் சேர நாட்டு முசிறிப் பட்டினத்துக்கும் வந்தார்கள். அவர்கள் அரபிக் கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அரபிக் கடலுக்கும் எரித்ரைக்கடல் (செங்கடல்) என்றே பெயர் கூறினார்கள். பிறகு குமரிக்கடல், வங்காளக் குடாக்கடல் ஆகிய கடல்களுக்கு வந்து தமிழகத்தின் கிழக்குக் கரையிலும் வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் , குமரிக் கடலுக்கும் வங்காளக் குடாக்கடலுக்கும் எரித்ரைக்கடல் (செங்கடல்) என்றே பெயரிட்டழைத்தார்கள்.

யவனர் அக்காலத்தில் நடுக்கடலில் பிரயாணஞ் செய்யாமல் கடற்கரை ஓரமாகவே பிரயாணம் செய்தபடியால், அவர்கள் முசிறி முதலான தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து போகப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் அரபிக் கடலின் ஊடே நடுக்கடலில் பருவக்காற்றின் உதவியினால் பிரயாணஞ் செய்ய அக்காலத்தில் அறியவில்லை. ஆனால், பருவக்காற்றின் உதவியினால் வெகு விரைவில் நடுக் கடலினூடே பிரயாணஞ் செய்யத் தமிழரும் அராபியரும் அறிந்திருந்தார்கள். பருவக் காற்றின் உதவியை அறியாத காரணத்தினால் யவனர் முசிறித் துறைமுகப் பட்டினத்துக்குக் கரையோரமாக வந்து போக நெடுங்காலஞ் சென்றது. கடைசியாகக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஹிப்பலஸ் என்னும் பெயர் கொண்ட கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்துக்கு நேரே நடுக்கடல் வழியாக விரைவில் பிரயாணம் செய்யும் இரகசியத்தைக் கண்டுபிடித்தான். அதுமுதல் யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேர நாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன, அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவன் பெயராகிய ஹிப்பலஸ் என்னும் பெயரையே சூட்டினார்கள், ஹிப்பலஸ் பருவக்காற்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு யவனக் கப்பல்கள் நேராகத் தமிழ் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வந்தன. அதனால் யவனக் கப்பல் வாணிகம் பெருகிற்று. இந்தக் கடல் வாணிகம் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்

52