பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9

யும் பெரும்பாலும் அமைக்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது. பாதுகாப்புக் கருதி அரசனின் உறைவிடம் அகநகர் என்றும் உட்கோட்டைப் பகுதி என்றும் குறிப் பிடப்பட்டது. மதில்களின் கீழே ஆழமான அகழிகளும் வெட்டப்பட்டு நீர் நிரப்பப் பட்டிருந்தன. அவற்றில் முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன. அரண்மனையை மையமாக வைத்துக் கோநகரைப் பார்க்கும்போது கட்டடக்கலை நகரமைப்புடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது. அகநகர் புறநகர் என்ற ஏற்பாட்டின்படி கட்டடக்கலை வளர்ந்திருக்கிறது என்ற குறிப்பு இங்கே இன்றியமையாததாகும்.

பூம்புகார், மதுரை போன்ற திட்டமிடப்பட்ட நகரங்களில் (Planned Cities—Walled Cities) இந்த ஏற்பாடு இருந்ததை நூற்சான்றுகளால் நன்கு அறிய முடிகிறது. தமிழர் புறப்பொருள் இலக்கணம், திணைகள், துறைகள் ஆகியவற்றிலேயே பாதுகாப்புக் கட்டடக் கலைக்கு முதன்மை தந்திருப்பதற்கான குறிப்புக்கள் நிறையக் காணக் கிடைக்கின்றன. சில திணை, துறைகளே அவ்வாறு அமைந்துள்ளன.

கட்டடக்கலை பற்றிய விவரங்கள், சொற்றொடர்கள் தமிழ் நூல்களில் ஆங்காங்கே பயின்று வருகின்றன. பழமொழியில் கூடக் கட்டடம் கட்டுவதன் சிறப்பு வீட்டைக் கட்டிப் பார்-திருமணத்தைச் செய்து பார்’ என வழங்குகிறது.

கட்டடத்திற்கு இன்று பெரிதும் பயன்படும் பல நவீனப் பண்டங்கள் அன்று இல்லை எனினும் பழந்தமிழர் இவற்றுக்கு இணையான பல பண்டங்களைக் கண்டு பிடித்திருந்தனர். தமிழர் கட்டடங்களுக்குப் பயன்படுத்தியவை எனப் பின்வருவனவற்றை அறிஞர் மு.இராகவ ஐயங்கார் குறிப்பிடுகிறார்.

கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையும் தந்தமும் வண்ணமும்