பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

107


3. சங்கீர்ணம் - இரண்டிற்கும் மேற்பட்ட பொருள்களைக் கலந்து கட்டுவது.

இதுகாறும் அரசனுக்குரிய கட்டடம், இறைவனுக்குரிய கட்டடம் ஆகிய கோயில்கள் ஆகியவற்றை உரிய சான்றுகளுடன் ஆராய்ந்து உண்மைகளைக் காண முடிந்தது.

இனி மக்கள் இல்லங்கள் வீடுகள் பற்றிய கட்டடங்களை ஓரளவு கவனிக்கலாம். இலக்கியங்கள் காப்பியங்களில் அரசர் இருக்கை, இறையவர் இருக்கைகள்பற்றிய சான்றுகள் அதிகமாகக் கிடைப்பதுபோல் மக்கள் இல்லங்கள், கட்டடங்கள் பற்றிய வருணனைகள் பெரும் பான்மையினவாகக் காணக் கூடவில்லை. இல், புக்கில், துச்சில், குரம்பை, குடிசை, குடும்பம் என்ற சொற்கள் கொண்டே ஆய்வைத் தொடங்கலாம்.

மக்களுக்கான கட்டடங்கள்

திராவிடக் கட்டடக் கலையில் ஒரு பகுதியாகிய பழந்தமிழர் கட்டடக் கலையில் மக்கள் எத்தகு கட்டடங்களை அமைத்து வாழ்ந்தனர் என்பது வினா. இவ்வினாவிற்குப் பல விடைகள் கிடைக்கின்றன.

இல்லம், இல், மனை, குரம்பை, புக்கில், துச்சில்,வீடு, குடி, குடில் போன்ற சொற்கள் பழந்தமிழர் நூல்களில் வழங்குகின்றன.

தமிழகத்தில் பழையகற்காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் நிரம்பக் கிடைத்திருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமான உணவு, உடை, உறையுள் என்ற மூன்றினையும் அமைத்துக் கொள்வதற்கான முயற்சியும், அம்முயற்சி வெற்றி பெறக் கையாண்ட முறைகளிலே ஏற்பட்ட வளர்ச்சியும் நாளாவட்டத்தில் மெல்ல மெல்ல அதே நேரத்தில்