பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

131


1. வன் பால், 2. மென் பால், 3. இடைப் பால் என மூவகைப்படும். அவற்றுள்,

வன் பாலாவது குழியின் மண் மிகுவது
மென் பாலாவது குழியின் மண் குறைவது
இடைப் பாலாவது குழியின் மண் ஒப்பு

ஈண்டு இவை பெரும்பான்மையாற் கொள்ளப்படும்.23

அரங்கிற்கு நிலங்கோடல் பற்றி அன்றும் மனை நூல் முறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை இப்பகுதி உறுதி செய்கிறது.

பின்னர் அரங்கு அமைக்கும் முறையும், உள்ளலங்காரமும் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

பொதியில் மலை முதலிய புண்ணிய நெடுவரையின் பக்கங்களில் நெடிதாகி உயர வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சானாக வளர்ந்தது கொண்டு நூல்களிற் சொல்லியபடியே அரங்கம் செய்ய அளக்குங்கோல் - உத்தமன் கைப்பெருவிரல் இருபத்து நாலு கொண்டது ஒரு முழமாகக்கோல் நறுக்கி அக்கோலால் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் குறட்டுயரமுமாய்க் கொண்டு -தூணத்துக்கு மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலத்துக்கு இட்ட உத்தரப் பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்குகோலாக உயரங்கொண்டு இத்தன்மையவாய் அளவுக்குப்பொருந்த வகுத்த வாயிலிரண்டினை உடையதாகச் செய்த அரங்கு என்றவாறு. 24

வாயிலிரண்டாவது புகச் சமைத்த வாயிலும் புறப்படச் சமைத்த வாயிலும் எனக் கொள்க.25 என்று கூறப்பட்டுள்ளது.

உட்புகும் வாயிலும் (Entry) வெளிப்படும் வாயிலும் (Exit) தனித்தனியே அமைப்பது இந்த நூற்றாண்டின் அரங்க உத்தி (Theatre Technic) என்று கருதுகிறோம்.