பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

141


போலவே இக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.

புகழ் பெற்ற பூம்புகார், மதுரை, காஞ்சி போன்ற கோநகரங்களே இதற்குச் சான்றாகும். நகரமைப்புக் கண்ணோட்டத்திலும், பண்பாட்டுக் கண்ணோட்டத்திலும்; பாதுகாப்புக் கண்ணோட்டத்திலும் இந்நகரங்கள் குறைவற அமைந்திருந்தன. நகரமைப்பு, ஊரமைப்புக் கலைகளில் பழந்தமிழர் சிறந்திருந்தனர் என்பதைப் பற்றிப் பல அறிஞர்களும், ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளவை ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன.

தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்ற உண்மையை உலகினர் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். “சீனம், மிசிரம், யவனம் இன்னும் தேசம் பலவும் புகழ் வீசிக் கலை ஞானம் படைத் தொழில் வாணிகமும் மிக நன்று வளர்ந்த தமிழ்நாடு". கட்டிடக் கலை, இயந்திரக் கலை, நீர்ப்பாசனக் கலை, நகரமைப்புக் கலை, துறைமுக வளர்ச்சி, கப்பல் கட்டும் கலை, சிற்ப வேலைப்பாடுகள் முதலிய பல வகையான பொறியியல் கலைகளின் சிறப்புகளைப் பழந்தமிழ் மக்கள் பெற்றிருந்தனர்1 என்று. பொறியியல் வல்லுநரான அறிஞர் டி. முத்தையன் கூறுகிறார்.

"முதல் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க யாத்திரிகர்கள் இருவருள் ஒருவரான தாலமி காவிரிப்பூம்பட்டின நகரமைப்பின் சிறப்பைப் பாராட்டிக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்”.2

"தமிழர்கள் கட்டடக் கலையில் உயர்திறன் பெற்றிருந்தனர். அவர்கள் வீடுகளும், பிற கட்டடங்களும் கலைத் திறன் மிக்கவையாயிருந்தன. அவர்களது சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும் கோயில்களும் புதை குழாய்களும், பிறவும், அவர் திறமை, பொறியியல் ஞானப் பெருமையைப் பற்றிப் பகுதி பகுதியாகப் பேசும்.”3