பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



நகரம், அதன் பின் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்னும் தன் அவாவைச் சித்தரிடம் வெளியிட்டது.

சித்தரும் அவ்வேண்டுகோளை ஏற்று, அருள் புரிய இசைந்தார்.

பின்னர் அந்தப் பாம்பு கீழ்த் திசையின்கண் சென்று தன் வாலை நீட்டி மிகப் பெரிய அந்த நகருக்கு வலமாகப் படிந்து உடலை வளைத்து, வாலைத் தனது வாயில் வைத்துப் பாண்டிய மன்னனுக்கு நகர எல்லையைக் காட்டியது.

அவ்வாறு பாம்பு வளைந்து கிடந்து, வரையறுத்துக் காட்டிய அளவின்படி மன்னன் நகர மதில்களை எழுப்பினான்.18

தெற்கே திருப்பரங்குன்றமும், வடக்கே இடபக் குன்றமும், மேற்கே திருவேடகமும், கிழக்கே திருப்பூவண நகரும் எல்லையாக அமையுமாறு மதில் சுவரின் வாயில்களை அமைத்தான். அந்நீண்ட மதில் ஆலவாய் மதில் என்று அழைக்கப்பட்டது. மதிலுக்கு உட்பட்ட நகரமும் பாம்புக்குச் சித்தர் கொடுத்த வாக்குப்படியே ஆலவாய் என அழைக்கப்பட்டது. இஃது ஆலவாய் என்னும் பெயருக்கான புராண வரலாறு ஆகும். இவற்றுள் நான்மாடக் கூடல் என்ற பெயருக்குக் கலித்தொகை உரையில் நச்சினார்க்கினியர் விளக்கம் கூறியுள்ளார்.19

“நான்கு மாடங்கூடுதலின் நான்மாடக் கூடலென்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்".

வட திருவால வாய்திரு நடுவூர்
வெள்ளியம்பலம் நள்ளா றிந்திரை
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்தமைந்த
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுரை
... ... ... ஒருபரங்குன்றம்20