பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

கட்டடம் தொழிலா? கலையா? கட்டடத் தொழில் (Construction work) என்ற தொடருக்கும் கட்டடக் கலை (Architecture)என்ற தொடருக்குமே நிரம்ப வேறுபாடுகள் உண்டு. கட்டப்படுவன அனைத்துமே கட்டடம்தான். ஆனால் நுண்ணிய கலைத் திறத்தினாலும், கலைத் தரத்தினாலும் உயர்ந்த அத்தகு கட்டட வேலைப்பாடே கட்டடக் கலையாகும்.2

கிரேக்கர்கள், உரோமானியர்கள் தத்தம் கட்டடக் கலை, நகரமைப்புத் திறன்களால் வரலாற்றில் புகழ்மிக்க இடம் பெற்றுள்ளனர். அதே அளவு மேன்மையும் திறனும் இக்கலைகளில் தமிழரிடமும் இருந்தன. தமிழரின் பழம்பெரும் நூல்களிலும் காப்பியங்கள், பிரபந்தங்கள், புராணங்களிலும் இதற்கான சான்றுகள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றை இவ்வாய்வு தொகுத்தும் வகுத்தும் முடிவு காண்கிறது.

தனியார் வீடுகள் (Domestic building)குடியிருப்புகள், கோவில்கள் அரசர்தம் அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், பொதுமன்றங்களான (Public building) அரங்கு, அவை ஆகியவை பற்றியும் தெருக்கள், வீதிகள், நகர் ஒழுங்கு ஆகியவை பற்றியும் ஆய்வு செய்யும்போது. பல உண்மைகள் தெளிவு பெறுகின்றன.

தலைப்பு முறைப்படி முதலில் கட்டடக் கட்டடக் கலையையும் பின்னர் நகரமைப்பையும் நிரல்பட அமைத்துக் கொள்கிறது இந்த ஆய்வு.

"கட்டடக் கலை. என்பது வெறும் புறத்தோற்ற உரு அழகு மட்டுமில்லை. அதன்மூலம் தூண்டப்படும் மக்களின் மனநிலை, உணர்வுகள், குணநலன், விழிப்புணர்ச்சி ஆகியவற்றையே அறிய முடியும்"3 என்கிறார் அஜய பாரத்வாஜ் என்கிற பேராசிரியர்.