பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

69


இம்மரங்களைக்கட்டடத்தில் பயன்படுத்தினால் இருக்கிற செல்வம் தேய்பிறை போலத் தேய்ந்துவிடும்-இருள் சூழும் எனக் கூறுகிறது மனைநூல். வாரிசுகள் இழப்பும், பெருந்துன்பங்கள் அடுத்தடுத்து வருவதும் இம்மரங்களால் விளையுமாம்.

இவை தவிர நெருப்புப் பட்டுப் பாதியளவு வெந்த மரங்கள் அவற்றின் வேகாமல் எஞ்சிய பகுதிகள் கொடி சுற்றிய மரங்கள் யானை முறித்த மரங்கள், பாழடைந்த வீட்டு மரங்கள், பெரும்புயல், காற்று போன்ற இயற்கைச் சீற்றத்தால் வீழ்ந்துபட்ட மரங்கள், கோயிலுக்குச் சொந்தமான மரங்கள், சுடுகாட்டில் இருந்த மரங்கள் போன்றவற்றையும் கட்டடத்தில் பயன்படுத்தக் கூடாது.55

ஏற்ற மரங்கள்

மிகவும் வலிமை உடையவனாய் தூண் போலப் பருத்து அகக்காழுடையனவாய் (உள்ளே வைரம் பாய்ந்தவை) அமையும் மரங்களே ஆண்மரம்.

புறக் காழனவே புல்லென மொழிப
அகக் காழனவே மரனென மொழிப 56

என்னும் தொல்காப்பிய மரபியல் நூற்பா இங்கு நோக்கத்தக்கது. மரத்தின் அடிப்பகுதி, மட்டுமே பருத்து நுனிப் பகுதியில் போகப் போகச் சிறுத்து அமையும் மரங்கள் பெண்மரம் எனப்படும்.

சிறுத்து நீண்டு மெலிந்து புறக்காழுடையதாக (உள்ளே வைரம் பாயாமல்) நெடிதாய்த் தலைப்பகுதி மட்டும் பெரிதாயுள்ளதாய்க் காணப்படின் அத்தகையவற்றை அலிமரம் என்பர்.

இம்மூன்று வகை மரங்களில் எங்கெங்கே எவ்வெவற்றைப் பயன்படுத்தலாம் என்பதற்கும்கூட மனைநூலில் வரையறைகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ப-5