பக்கம்:பழைய கணக்கு.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

அவர் வருவதற்குள் அவருக்கும் சேர்த்து ப்ரேக்ஃபாஸ்ட் ஆர்டர் செய்திருந்தேன், அந்த ஐட்டங்களைக் கண்டதும் “நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேனே! இப்போது இன்னொரு முறை சாப்பிட முடியாது” என்றார்.

“உங்களுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணியாகி விட்டது. நீங்கள் சாப்பிட்டாலும் சாப்பிடா விட்டாலும் “பில் பணம் கொடுத்தாக வேண்டும்” என்று நான் சொன்னேன். கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு அப்படியா? எவ்வளவு பில் வரும்?” என்று கேட்டார் பெரியார்.

“பதினேந்து பவுண்ட் வரலாம்” என்று சொன்னேன்.

உடனே, நம் ஊர் ரூபாய் எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு. “ஐயோ. அவ்வளவு ரூபாயா? சரி, சரி” என்று அவ்வளவு ஐட்டங்களையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுத் தீர்த்தார். வயிற்றில் இடமே இல்லை என்று சொன்னவருக்கு அப்புறம் எப்படி இடம் கிடைத்தது என்று தெரியவில்லை! “சரி; இப்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார் நாயுடு.

“பெரியார் சாப்பிட்டார் என்பதற்காக நானும் சாப்பிட முடியுமா என்ன?” என்று எழுந்தேன் நான்.

“சரி. அப்படியானால் போய் வாருங்கள். உங்களை நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டார் நாயுடு.

காரில் ஏறி உட்கார்ந்தேன். கேட் வரை போன கார் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெற்றிகரமாக வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. இது நாயுடுவின் வேலையாகத்தான் இருக்கும் என்பது எனக்கு உடனே புரிந்து போயிற்று. திரும்பி பங்களாவுக்கே போனேன்.

“ஏன் போகலயா?” என்று ஒன்றும் தெரியாதவர் போல் குறும்புச் சிரிப்பு சிரித்துக்கொண்டே கேட்டார் நாயுடு.

“கேட் பூட்டியிருக்கிறதே என்ன செய்ய?”

“நீங்களே சாவிதானே! பூட்டைத் திறந்து கொண்டு போக வேண்டியதுதானே?” என்று கூறிவிட்டு பலக்கச் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/109&oldid=1146096" இலிருந்து மீள்விக்கப்பட்டது