பக்கம்:பழைய கணக்கு.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

நானகவே அண்ணா நகரில் வீடு வீடாகச் சென்று அவருக்காக வோட்டுக் கேட்டேன். ஏறத்தாழ ஒருமாத காலம் அண்ணாநகரில் ஒரு தெரு பாக்கி இல்லாமல், ஒரு வீடு பாக்கி வைக்காமல் தினமும் நடந்தே போய் வோட்டுக் கேட்டேன். இதெல்லாம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நேசத்தின் அடிப்படையில் செய்த காரியங்கள்.

கலைஞர் முதலமைச்சராயிருந்த போது வெளியூர்ப் பயணம் போகாத நாட்களில் மாலை வேளைகளில் கடற்கரை செல்வதுண்டு, மெரினா கடற்கரையில் பத்து இருபது நண்பர்கள் அவரைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். அந்த வட்டத்தில் சிற்சில சமயங்களில் நானும் கலந்து கொள்வேன் அரசியலைத் தவிர மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். அப்போதைய அமைச்சர் என். வி. என். அவர்கள் தவறாமல் வந்து விடுவார். வீட்டிலிருந்து கலைஞருக்குப் பிடித்தமான ‘நொறுக்குத் தீனி’ கொண்டு வருவார். அதை எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வார்கள். சில சமயம் நானும் ஏதாவது தின்பண்டம் எடுத்துச் செல்வேன்.

திருமதி இந்திரா காந்தி அறிவித்திருந்த எமெர்ஜென்சி உத்தரவுகள் மிகக் கடுமையாக இருந்து கொண்டிருந்த நேரம். கலைஞரின் கடற்கரை வட்ட அங்கத்தினர்களை மத்திய அரசு மிகக் கூர்மையாகக் கண்காணித்துக் கொண்டிருந்தது. நான் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தைரியமாக அந்த வட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன்.

கோவை மாநாட்டுக்குப் பிறகு தி. மு. க. வின் எதிர்காலமே ஓர் பயங்கரச் சுழலில் சிக்கியிருந்தபோது, பல தலைவலிகளுக்கும் இந்திரா காந்தியின் மறைமுகமான கிடுக்கித் தாக்குதல்களுக்கும் இடையே மன அமைதியின்றி எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்சிரிப்புப் பூச்சில் வாழ்ந்து கொண்டிருந்த கலைஞர் அவர்கள் என் அறுபதாண்டு விழாவுக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டிருந்தார்.

இன்னும் இரண்டொரு நாட்களில் தி. மு. க ஆட்சி டிஸ்மிஸ் ஆகப்போகிறது. உள்ள வேதனையும் உடல் வேதனையும் சேர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்த கலைஞர் என் விழாவில் கலந்துகொள்ள முடியாத தவிப்பு, உடல் நிலை சரியில்லை வர முடியாது போலிருக்கிறது என்று கலஞர் வீட்டிலிருந்து தகவல் கிடைத்த போது கலைஞருக்கு நான் ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். “ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி. கடமை தவறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/117&oldid=1147334" இலிருந்து மீள்விக்கப்பட்டது