பக்கம்:பழைய கணக்கு.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அடிக்க வேண்டும். அந்த ரத்தத்தை வலது உள்ளங்கையில் ஒற்றி எடுத்துக் குறுக்கே வரும் ரெஃபரியின் பனியன் மீது அப்ப வேண்டும். ரெஃபரி அணிந்துள்ள வெள்ளை வெளேரென்ற பனியன் மீது படியும் அந்த ரத்தம் சூரிய ஒளி போன்ற விளக்கு வெளிச்சத்தில் சுற்றி உள்ள மக்களுக்குப் பளிச்சென்று தெரியும் ரசிகர் கூட்டம் இதை உண்மைச் சண்டை என்றே நம்பிவிடும். அந்த நேரம் பார்த்து கிங்காங் எழுந்து தாராசிங்கைச் சவால் சண்டைக்கு அழைத்தால் மறுநாள் வசூல் இரண்டு மடங்கு கூடும் என்பது எங்கள் யோசனை.

கிங்காங்கின் நெற்றிச் சதை மூன்று மடிப்புகள் கொண்டது. அந்த மடிப்புகளுக்கிடையே அன்று மேடைக்குச் செல்லுமுன் ‘ப்ளே’டினால் லேசாகக் கீறிக் கொண்டார். பின்னர் அதைத் துடைத்துச் சரி செய்து விட்டார். அன்று மாலை மேடையில் கிங்காங் நெற்றியில் தாராசிங் அடித்த போது ஏற்கனவே கீறி வைத்திருந்த இடத்தில் ரத்தம் குபுகுபுவென்று பெருகியது.

நாங்கள் திட்டமிட்டபடியே தாராசிங் அந்த ரத்தத்தை எடுத்து ரெஃபரியின் பனியனில் அப்பினார். ஸ்டேடியத்தில் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ரத்தத்தைக் கண்டதும் நரம்பில் முறுக்கேறிக் கூச்சலிட்டனர். போதாக் குறைக்கு கிங்காங் வேறு ரெஃபரி மீது பாய்ந்து அவர் பனியனைப் பிடித்து இழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்ட போது ஸ்டேடியமே அமளி துமளிப்பட்டது.

பனியன அவர் அப்படிக் கிழித்துப் போட்டதும், “அடாடா! பனியனையே கிழிச்சுட்டான்யா! உண்மைச் சண்டையில்லேன்ன அப்படிக் கிழிப்பானா?” என்று அவ்வளவு பேரும் பேசிக் கொண்டு போனார்கள. அன்று வசூலான தொகை முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! பனியன் விலையோ பத்து ரூபாய்! முப்பத்திரண்டாயிரம் வசூலாகும் போது பத்து ரூபாய் பனியனைக் கிழிப்பது ஒரு பெரிய விஷயமா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/13&oldid=1145660" இலிருந்து மீள்விக்கப்பட்டது