பக்கம்:பழைய கணக்கு.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

சில ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கை திசை மாறி, நான் எழுத்தாளனாக வளர்ந்து பத்திரிகை ஆசிரியனாகவும் ஆகிவிட்டேன். கால வெள்ளத்தின் சுழல்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து, எதிர்நீச்சல் போட்டு சிலிர்த்து நிற்கின்ற என் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றில் மறக்க முடியாதவை மறந்து போனவை எல்லாம் உண்டு. ஆனாலும் இளம் வயதில் காலணாவுக்கு கலர் பத்தாஸ் (சர்க்கரை மிட்டாய்) வாங்கிச் சாப்பிட்டது போன்ற அற்ப நிகழ்ச்சிகள் மட்டும் மறக்கவே இல்லை.

சில மாதங்களுக்கு முன், “சாவி இதழ் வைத்திருந்தால் ரூபாய் 500 பரிசு” என்று ஒரு திட்டத்தை அறிவித்து வாரம் ஒரு ஊருக்குப் போய்ப் பரிசுத் தொகையைக் கொடுத்து வந்த போது, வேலூருக்கு ஒருமுறை போயிருந்தேன். அங்கே ஒரு வீட்டில் தையல் வேலை செய்யும் ஏழைப் பெண்மணி ஒருத்திக்குப் பரிசு கிடைத்தது. நான் வந்திருக்கும் செய்தி லேசாக அக்கம் பக்கம் பரவ அந்த வீட்டில் ஒரு சின்னக் கூட்டம் சேர்ந்து விட்டது. அந்தக் கூட்டத்தில் தொண்டுக் கிழவர் ஒருவர் ஓரமாய் நின்று என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பரிசுத் தொகை கொடுத்து முடிந்ததும் அவர் என்னருகே வந்தார்.

“என்னை அடையாளம் தெரிகிறதாப்பா?” என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லையே ... தாங்கள் யாரென்று சொன்னால் தெரிந்து கொள்வேன்” என்று நான் இழுத்தேன்.

“நான்தான் வாழைப்பந்தல் போஸ்ட் மாஸ்டர். சின்ன வயசில் நீ வந்து இன்ஷூர் செய்து விட்டுப் போவாயே. ஞாபகம் இருக்கிறதா? அந்த விசுவநாதன்தானே நீ இப்போது பேரும் புகழுமாய் இருப்பது அறிந்து எனக்குச் சந்தோஷமாய் இருக்கிறது. நீ ஒரு புகழ் பெற்ற எழுத்தாளனாக இருப்பது நம் ஜில்லாவுக்கே பெருமை! நான் இந்தத் தெருவில்தான் எதிர்வீட்டில் குடியிருக்கிறேன். நீ வந்திருப்பதாகச் சொன்னார்கள். உன்னைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன் இப்போது பார்த்துப் பேசி விட்டேன், ரொம்ப சந்தோஷம்!” என்றார்.

அந்தப் போஸ்ட் மாஸ்டரின் அன்பும், அவர் கண்கள் பாச உணர்வின் மிகுதியால் பனித்திருந்ததும் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/137&oldid=1146128" இலிருந்து மீள்விக்கப்பட்டது