பக்கம்:பழைய கணக்கு.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

நோக்கி நடக்கிறபோது கால் வலி தாங்க முடியவில்லை. இரட்டை மாட்டு வண்டி ஒன்று போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டிக்காரர் நிம்மதியாக வண்டிக்குள்ளேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

நான் அந்த வண்டிக்காரரை எழுப்பி “நீங்க நல்லாப் படுத்துத் தூங்குங்க. நான் வண்டி ஒட்டுகிறேன்” என்றேன். அவர் சந்தோஷமாய் ஒப்புக் கொண்டார்.

எனக்கு வண்டி ஓட்டத் தெரியும். மாடுகளை அதட்டி வால்களை முடுக்கிவிட்டு வண்டியை வேகமாகச் செலுத்தினேன். மாடுகளின் சலங்கை ஒலி காதுக்கு இனிமையாக இருந்தது. ஆற்காட்டை இன்னும் ஒரு மணி நேரத்தில் அடைந்து விடலாம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம். நான் அதுவரை ஆற்காடு பார்த்ததில்லை.

இந்தச் சமயம் பார்த்துப் பின்னால் ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்ஸின் முன் சீட்டில் என் தந்தை உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்து போய் வண்டிக்குள் ஆமை போல் அடங்கிக் கொண்டேன். அப்படியும் என் சிவப்பு மேல் துண்டு (காசிப்பட்டு) என்னை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது. “அதோ, அதோ பையன்!” என்ற என் தந்தையின் குரல். பஸ் நின்று விட்டது. என்னைத் தேடிப் பிடிப்பதற்காக ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு வந்திருந்த என் தந்தை என்னைக் கண்டதும் கண்கலங்கி விட்டார்.

“உன்னை அடித்தது தப்புதான். அதற்காக நீ இப்படியா சொல்லாமல் வந்து விடுவது? ஊரில் ஒரு கிணறு பாக்கி இல்லாமல் தேடிப் பார்த்து விட்டோம். நீ எனக்கு ஒரே மகன். பிள்ளைப் பாசம் கேட்கவில்லை. அன்பினால்தானே அடித்தேன்; நீ இப்படிச் செய்யலாமா? உன் அம்மா உன்னைக் காணாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். வண்டியை விட்டு இறங்கி வா. வீட்டுக்குப் போகலாம்” என்று அழைத்தார். நான் சற்று பிகு செய்துவிட்டு அப்புறம்தான் இறங்கி வந்தேன்.

காலையில் குப்படிச்சாத்தம் பக்கமாக நான் நடந்தே போய்க் கொண்டிருந்ததை எதிரில் வந்த பள்ளிச் சிறுவர்கள் பார்த்து விட்டு என் தந்தையிடம் போய்ச் சொல்லியிருக்கிறர்கள். உடனே என் அப்பா ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு செய்து கொண்டு என்னைத் தேடி வந்திருக்கிறார். அப்புறம் என்ன செய்ய? நான் அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு அப்பாவோடு ஊர் போய்ச் சேர்ந்தேன். ஆசை தீர இன்னொரு பஸ் பயணம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/140&oldid=1146131" இலிருந்து மீள்விக்கப்பட்டது