பக்கம்:பழைய கணக்கு.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கொஞ்சம் இனிப்பு—கொஞ்சம் கசப்பு

காஞ்சிப் பெரியவர்களை தரிசிப்பதற்காகச் சென்ற வாரம் கலவைக்குப் போனபோது, அப்படியே என் சொந்த கிராமத்தையும் போய்ப் பார்த்து விட்டு வந்தேன். கிராமத்தைச் சுற்றிலும் முட்செடிகள் அமோகமாய் வளர்ந்திருப்பதைத் தவிர பெரிய மாறுதல்கள் எதையும் காண முடியவில்லை.

சிறு வயதில் நான் வசித்த அந்தத் தென்னை மர வீட்டையும் எட்டிப் பார்த்தேன். பூட்டிக் கிடந்தது. “தென்னை மரம் போயிட்டுது” என்று முருகேச கவுண்டர் சற்று வருத்தத்தோடு சொன்னபோது எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

கலவைக்குப் போகும் வழியில் கரும்புத் தோட்டங்கள் கண்ணில் பட்டன. அந்தக் காலத்தில் என் தந்தை கரும்பு சாகுபடி செய்த பழைய நினைவுகள் தோன்றி என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின.

கிராமத்து எல்லையில், எட்டியம்மன் கோவிலுக்கருகில் எங்களுக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலங்கள் இருந்தன. ஆற்றுப் பாசன வசதி இல்லாததால் பெரிய கிணறுகள் வெட்டி ஏற்றம் போட்டு வயலுக்கு நீர் பாய்ச்சுவார்கள். வடாற்காடு மாவட்டம் முழுதுமே ஏறக்குறைய இப்படித்தான்.

என் தந்தை அந்த வயல்களுக்குப் பக்கத்தில் பெரிய கிணறு வெட்டி ஏற்றம் போட்டிருந்தார். அதில் ஊற்றுத் தண்ணீர் எப்போதும் சுரந்தபடி இருக்கும். கிணற்றங்கரை மேட்டில் வாழையும். அகத்தியும், முருங்கையும் ஆண்டு முழுவதும் பலன் தந்து கொண்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/147&oldid=1146139" இலிருந்து மீள்விக்கப்பட்டது