பக்கம்:பழைய கணக்கு.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஊருக்கு வந்த குறத்தி

கிராமத்துப் பள்ளியில் ஆங்கிலம் கற்பதற்கு வழியில்லை. ஆங்கில எழுத்துக்களை ஆரூர் வாத்தியார் நரசிம்ம ஐயங்காரிடம் கற்றுக் கொண்டேன். அவர்தான் பஞ்சாயத்து ஸ்கூல் டீச்சர். கிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆரூரிலிருந்து மாம்பாக்கத்துக்கு தினம் தினம் நடந்தே வந்து போவார். நான் அவரிடம் படித்த மாணவன் என்பதில் அவருக்குப் பெருமை அதிகம். சமீபத்தில் ஒருநாள் அவர் என்னிடம் பேச விரும்பி என் வீட்டுக்குப் போன் செய்த போது நான் வீட்டில் இல்லாமற் போனது என் துரதிருஷ்டமே.

அந்த ஆசானிடம் எனக்கு அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முறையில் அந்தப் பெரியவரை நேரில் சென்று தரிசித்து வணங்கி விட்டு வரும் நன்னாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆங்கில எழுத்துக்கள் இருபத்தாறும் அவரிடம் கற்றுக் கொண்டவைதான். பிறகு பெரிய எழுத்து பாட புத்தகங்களை எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்து கொண்டதும் அவரிடம் தான்.

ஒரு நாள் எங்கள் கிராமத்துக்கு நரிக்குறவர் குடும்பம் ஒன்று வந்திருந்தது. அந்தக் குடும்பத்தினர் ஊர் ஓரத்தில் சத்திரத்துக்குப் பின்னால் மாந்தோப்பில் ‘முகாம்’ போட்டிருந்தார்கள். அவர்களில் இளம் வயது குறத்திப் பெண் ஒருத்தி மிக வசீகரமாயிருந்தாள். ஏறக்குறைய டி. ஆர். ராஜகுமாரி மாதிரி தோற்றம் உடையவள். ‘ஸெக்ஸ்’ உணர்வு இன்னதென்று புரியாத இரண்டுங்கெட்டான் வயசு என்னுடையது. அவளிடம் எனக்கு ஒரு ‘கிறக்கம்’ உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/151&oldid=1146143" இலிருந்து மீள்விக்கப்பட்டது