பக்கம்:பழைய கணக்கு.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

படுத்துக் கிடந்தேன். பசிக் கொடுமை பெருங்குடலைப் பிடுங்கித் தின்றது. அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லாமல் அழுது விட்டேன். அவ்வப்போது தண்ணீர் குடித்துப் பசியை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். சட்டைப் பையில் ஒரே ஒரு தம்படி மிச்சம் இருந்தது. கடைக்குப் போய் அதற்கு வாழைப் பழம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பட்டினியைத் தொடர்ந்தேன்.

ஆம்; அந்தக் காலத்தில் ஒரு தம்படியும் உண்டு, தம்படிக்கு ஒரு வாழைப் பழமும் உண்டு.

இதற்கிடையில் வில்லிவாக்கத்தில் என் தாய் தந்தையர், என்னைத் தேடி எங்கெங்கோ அகலந்திருக்கிறார்கள். யார் யாருக்கோ தந்தி கொடுத்து விசாரித்திருக்கிறார்கள். நான் எங்கு போனேன் என்று தெரியாமல் அழுது புலம்பியிருக்கிறார்கள்.

“மீண்டும் மகனை உயிரோடு பார்ப்போமா?” என்று தவித்திருக்கிறார்கள். மகன் திரும்பி வந்தால் திருப்பதிக்குக் காணிக்கை செலுத்துவதாகவும் சமாராதனை செய்து பிராமணர்களுக்கு சாப்பாடு போடுவதாகவும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

திருப்பாதிரிப்புலியூரில் நான் பசி தாங்காமல் கோயிலில் சதிர்த் தேங்காய் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் எனக்காக என் தாய் தந்தையர் சமாராதனை செய்து பிராமணர்களுக்குச் சாப்பாடு போடுவதாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நான் என் நிலையை விளக்கி அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். பசிக் கொடுமை தாங்காமல் போகவே அருகிலிருந்த ஓட்டல்காரரைப் பரிச்சயம் செய்து கொண்டு, அவரிடம் என் நிலைமையை விளக்கியபோது அவர் என் மீது பரிதாபப் பட்டு சாப்பாடு போட்டதுடன் கார்டு எழுதிப் போடக் காசும் கொடுத்தார். என் கடிதத்தைக் கண்ட மறுகணமே என் தந்தை, நண்பர் ஒருவரை அடுத்த ரயிலிலேயே திருப்பாதிரிப்புலியூருக்கு அனுப்பி வைத்தார்.

அந்த நண்பரோடு நான் மறுநாள் காலை வில்லிவாக்கம் திரும்பிப் போனதும் என் தாயார் பாசத்தோடு என்னைக் கட்டிக் கொண்டு அழுது விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/163&oldid=1146159" இலிருந்து மீள்விக்கப்பட்டது