பக்கம்:பவழபஸ்பம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

15

என்ன செய்வது என்ற சஞ்சலம் மட்டும் அவளை வாட்டி வந்தது. வெண்ணிலா வீண் வதந்திகளைப் பரப்புவாள் என்ற அச்சமும் இருந்தது மருதவல்லிக்கு. தலையணை நனைந்தது, கூந்தல் பளபளப்பை இழந்தது. இறுதியில் சஞ்சலத்தையும், அச்சத்தையும் கடந்தாள். கவிராயரிடம் தன் உள்ளக்கிடக்கையை ஒளிவு, மறைவு இன்றி எடுத்துரைத்தாள்.

"நான் பெருமை அடைகிறேன் மகளே! பெருமை அடைகிறேன்! வீரமும் அறமும் உருவெடுத்ததுபோல் இருக்கிறாய். வா, அம்மா! இனி நாம் நமது இல்லம் செல்வோம்' என்று கவிராயர் கூறியபோது, நீண்ட நாட்களாக அவளை விட்டுப் பிரிந்திருந்த புன்னகை திரும்பிவந்து தவழ்ந்தது.

"தொலைந்தால் போதும். மனைவியாகக்கொண்ட தோஷத்துக்காகப் பணம் வேண்டுமானாலும் அழுகிறேன்", என்று நவகோடியார் கூறியபோது, "பணமா! வேண்டாமப்பா..... உன்னிடம் இருப்பது அது ஒன்றுதானே, கட்டிக்காத்துக் கொண்டிரு" என்று முதியவர் கூறினார். மருதவல்லி தாக்க வந்த நவகோடியாரைத் தைரியமாகவே தடுத்து நிறுத்தினாள். தந்தையும் மகளும், மாளிகையை விட்டு வெளியேறினார்கள் — மன்னன் மகிழ்ந்தான். வெண்ணிலா விருந்தளித்தாள் தோழிகளுக்கு!

விளக்கமில்லாத மக்கள், தன் மகளைக் குறித்துக் கேவலமாகப் பேசுவர் என்பதை எண்ணி, கவிராயர் சிறிது ஆயாசமடைந்தார், எனினும், தூற்றலைத் தாங்கிக் கொண்டு, தூய வாழ்க்கையாலும், தொண்டின் சிறப்பாலும், மக்களின் ஏளனத்தையும், வீழ்த்தவல்லவள் மருதவல்லி என்ற தைரியம் அவருக்கு இருந்தது. கிராமம் சென்று, சிறார்களுக்கெனப் பள்ளியொன்று அமைத்து அதிலே மருதத்தைப் பணியாற்ற ஏற்பாடு செய்வது என்று திட்டமிட்டார். மருதவல்லியோ மனதிலே வேறோர் திட்டம் வகுத்து வைத்திருந்தாள். ஊர்க்கோடி வந்ததும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/16&oldid=1638501" இலிருந்து மீள்விக்கப்பட்டது