பக்கம்:பவழபஸ்பம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பவழ

வோனிடம் ஊழியம் செய்து, கொழுக்கும் உலுத்தர்களின் உறுமலைச் சட்டை செய்யாது மக்களின் நல்வாழ்வுக்காகவும் மார்க்கத்தின் மாசு போக்கவும் பாடுபடும் நாங்களா காலிக் கூட்டம்?"

சிறை விசாரணைக் கூடத் தலைவனால் அதற்குமேல் பேச முடியவில்லை. மருதவல்லியின் பேச்சிலே கனல் தெறித்தது. உடலிலே இரத்தம் பீறிட்டு வருமளவு சவுக்கடி விழுந்தது. பதறவில்லை! மருதவல்லியின் அஞ்சா நெஞ்சு கண்ட மற்றவர்கள் கொஞ்ச நஞ்சம் கொண்டிருந்த அச்சத்தையும் நீக்கிக் கொண்டனர். விடுதலை தருவதாயினும், தமது பிரச்சாரத்தை விடமுடியாது என்று சூள் உரைத்தனர். எங்கிருந்து 'இதுகளுக்கு' இவ்வளவு துணிவு பிறந்தது? எங்கோ உலவிய புத்தனுக்கு இப்படி, நாடெங்கும் படைகளா! என்ன ஆச்சரியம்! என்று எண்ணினான், சிறைகூடத் தலைவன்—அவனையும் புத்தமார்க்கம் தழுவ முனைந்தது—மிக்க சிரமப்பட்டு அதனைத் தடுத்து நிறுத்தினான்.

அரநாடு புரட்சியைப் பொசுக்கியே தீரும். புது மார்க்கம் புக இடமளிக்காது, என்று முழக்கமிட்ட மார்த்தாண்டன், அறநெறிப் பிரச்சாரம் செய்துவந்த மருவதல்லி போன்றாரைச் சிறையிலே தள்ளியதோடு விடவில்லை. இதனையே வாய்ப்பாகக் கொண்டு, 'வருவாய்' தேடவும் ஒருவழி வகுத்துக்கொண்டான். புரட்சிக்காரர்கள், புது மார்க்கத்தைப் புகுத்த முனைவோர், ஆகியோரைச் சிறைப் படுத்துவதுடன்; அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது என்று திட்டமிட்டான். துளியும் தொடர்பு அற்ற பல செல்வர்களையும், புது மார்க்கத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் தள்ளி, பெரும்பொருள் அபராதம் செலுத்தச் செய்தான்—வளமிக்க வயல்கள், சிங்கார மாளிகைகள், பொற்குவியல்கள், பறிமுதலாயின! பணம் படைத்தோர்களிடையே புதிய பீதி உண்டாயிற்று. புதிய மார்க்கத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/19&oldid=1638504" இலிருந்து மீள்விக்கப்பட்டது