பக்கம்:பவழபஸ்பம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பவழ

"உண்மைதான், சொத்தும் பறிமுதலாகக்கூடும்"

"ஆமாம் அரசன் கடுங்கோபத்துடன் இருக்கிறார். அரசைக் கவிழ்க்கச் சதிசெய்தால் கோபம் வராமலிருக்குமா"

"மன்னன் கோபிப்பது மணிமுடி பறிபோகுமோ என்பதற்காக அல்ல. மதம்—நமது மதம்—புராதன மார்க்கம்—வேத நெறி—இதை நாசம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறதே என்ற கோபம்தான்!"

"தாங்கள்தான் நல்வழி காட்டவேண்டும்!"

"நேற்றிரவு வெண்ணிலா ஒளியுடன் இருந்த நேரம், நான் இது குறித்து யோசித்தவண்ணமிருந்தேன். நவகோடியாரே! சதிபுரியும் ஒரு பெண்ணை ஏனய்யா துணைவியாகக் கொண்டீர். உமது கண்களை மறைக்கும் அழகியோ அவள்! எவ்வளவு அழகு இருந்தாலும், ஏனய்யா! மதத்தை நாசமாக்குபவளிடம் மையல் கொள்ளலாமா!"

"அவளைக் கண்டால், யாரும், சதிகாரி, என்று கூற முடியாது ஐயனே!"

"முகம் நிலவு என்றே வைத்துக்கொள்ளுமய்யா. பொற்கொடி, பூங்கொடி! என்றுகூடப் புகழ்ந்து கூறத்தக்கவள் என்றே வைத்துக்கொள்—அதற்காக—ஒரு பெண்ணின் பிரேமைக்காக, மார்க்கத்தை இழப்பதா?

"நான் அவளை இழக்கச் சம்மதித்தேனே...முன்னால் இருந்த தொடர்பல்லவா, இன்று ஆபத்தாக உருவெடுக்கிறது"

"ஏதாகிலும் செய்ய இயலுமா என்று யோசிக்கிறேன், இவ்வளவு ஆபத்தும் வந்திராது, உன் போன்றவர்கள் சரியாக நடந்துகொண்டிருந்தால். மடம்கட்ட, மகேஸ்வர பூஜைசெய்யப், பணம் கேட்கும்போது கையை விரித்து விடுகிறீர்கள்"

"காணிக்கை தரச் சித்தமாக இருக்கிறேன்...மருதவல்லியைக் குற்றமற்றவள் என்று கூறிவிட்டால் போதும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/23&oldid=1638508" இலிருந்து மீள்விக்கப்பட்டது