பக்கம்:பவழபஸ்பம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

25

"மேனி வாடி வதங்கிவிட்டது மகளே!"

"மனம் வளமாகிவிட்டதப்பா"

"கறுத்துப்போய்விட்டிருக்கிறாய் கண்ணே!"

"உடல்தானே! உள்ளத்திலே புதிய ஒளி இருக்கிறதப்பா இப்போது"

தந்தையும் மகளும், கவலையற்றுப் பேசுகிறார்கள்— மாளிகையை இழந்தோம், இன்ப வாழ்வு இழந்தோம் என்பது பற்றிய கவலையற்று.

"என்னங்க! புரட்சி எப்ப வருதுங்க. இந்த ஆடியிலேயாவது வரும்களா? என்று கேலி பேசுகிறார்கள் பேதைகள்.

"டேய், அதோ, கிழவன் கைத்தடியைப் பார்த்திங்களா! மந்திரக்கோலடா அது, மந்திரக்கோல்" என்று ஏளனம் செய்கிறான் ஒரு காலி.

மருதவல்லி சிரிக்கிறாள். "அப்பா! இவ்வளவு பேர்களையும் குணப்படுத்த வேண்டும். வேலை நிரம்ப இருக்கிறது ஒயாமல் உழைத்தாக வேண்டும்" என்று கூறுகிறாள்.

ஓயாமல் உழைக்கிறார்கள் இருவரும், திக்கற்றோருக்கு உதவி புரிகிறார்கள். கலனான ஒரு கோயிலில் குடி ஏறி, அங்குக்கூன், குருடு, செவிடு, ஊமை, கைகால் இழந்தவர் ஆகியோரைத் தங்கவைத்து, பிச்சை எடுத்தும், சிறு உதவித் தொகைகள் திரட்டியும், அன்னமிடுகிறார்கள். திக்கற்றவர்கள் இருப்பது பற்றி அதுவரை துளியும் கவலைப்படாத அரசு, ஆலயத்தை அவர்கள் தமது இருப்பிடமாகக் கொண்ட செய்தி தெரிந்ததும், வேகமாகக் கிளம்பிற்று அவர்களைக் காப்பாற்ற அல்ல, ஆலயத்தைப் பாதுகாக்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/26&oldid=1638695" இலிருந்து மீள்விக்கப்பட்டது