பக்கம்:பவழபஸ்பம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

37

அலைந்தாராம்...பதினான்கு ஆண்டுகளய்யா, பதினான்கு ஆண்டுகள்—ஒன்றல்ல இரண்டல்ல, பதினான்கு ஆண்டுகள் கானகவாசம் நம் ஐயன் இராமபிரானுக்கு—மரவுரி—கனியும் காயும் உணவு—தரை தான் பஞ்சணை.....கல் மனமும் கரையுமே, ராமகாதை கேட்டு...

"ஆமாம்—முன்பு! இப்போது, மக்கள், ஸ்ரீராமர் அடவி சென்றது, அங்கு ஈரேழாண்டு வாசம் செய்தது எல்லாம், அவருடைய தகப்பனாரின் வாக்கைக் காப்பாற்றத்தான்—மக்களுக்காக அல்லவே—புத்தர், மக்களுக்காக அல்லவா அரச போகத்தைத் துறந்தார், என்று கேட்கிறார்கள்"

"கேட்பார்களய்யா, கேட்பார்கள்! அவர்களின் நாக்கை அறுக்கத்தக்க வீரர்கள் இல்லை இப்போது, அதனால் கேட்கிறார்கள்..."

"கானகத்திலே கஷ்டம் அனுபவித்தான பிறகு, ராமபிரான், நாடு திரும்பி பட்டாபிஷேகம் செய்துகொண்டு சுகப்பட்டார்—புத்தர், துறவியானவர், துறவியாகவே இருந்து விட்டார்—இது வேறு மக்கள் மனதை மயக்கி விடுகிறது...."

"மயக்கும், மயக்கும்! எவ்வளவு காலத்துக்கு என்பதைப் பார்த்து விடுகிறேன்..."

"ஒவ்வொரு மண்டலமாகப் பரவுகிறது புதிய மார்க்கம்..."

"இங்குமட்டும் என்னவாம்! நேர்த்தியான யாகம் நடத்தி எவ்வளவு காலமாகிறது—ஏதோ ஆலய பூஜைகள் நடக்கின்றன—வேறு என்ன விசேஷம் நடக்கிறது...?"

"மன்னனிடம், கூறினேன்—ஆகட்டும் பார்ப்போம்—இழுத்தாற்போலத்தான் பேசுகிறார்....செலவு அதிகமாகுமோ என்று ஆயாசப்படுகிறார்..."

"காமக் கூத்தாடமட்டும் காசைக் கரியாக்கத் தயங்குவதில்லை—கடவுள் காரியமென்றால், கையை விரிக்கிறார்.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/38&oldid=1638896" இலிருந்து மீள்விக்கப்பட்டது