பக்கம்:பவழபஸ்பம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பவழ

பரிபூரண திருப்தியுடன் பாலும் பழமும் சாப்பிட்டுக் கொண்டு பரிமளவாடை கொண்ட பஞ்சணையில் நீ படுத்துத் தூங்கினபோதெல்லாம் நான் பாழும் கணக்கு கணக்கு என்று அதிலே மூழ்கி, இவ்வளவு போக போக்கியங்களை உனக்கு அளித்தேன். நீ மக்கள் மன்றத்தில் பேசுகிறாய்! மக்கள் கூட்டத்திலிருந்து உன்னைத் தேடி எடுத்து, சீமாட்டியாக்கினேன். நீ சீறிச் சீறிப் பேசினாயாம், மன்றத்திலே அறிவு கெட்டவளே! நான், வணிகன், இலாபம் பெறுவது என் தொழில். அதை அனுபவிப்பவள் நீ. அனுபவிக்கும் சுகத்தையும் மறந்து அந்தச் சுகத்தை உனக்கு அளிக்கவே, சுவடியும் கையுமாகக் கிடக்கும் எனக்கு நன்றி செலுத்துவதையும் விட்டு யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு, தாறுமாறாகப் பேசிவிட்டு வந்தாயே, இது தகுமா? நான் சாமர்த்தியமாகத் தொழிலை நடத்தியிராவிட்டால், நீ எங்கு இருப்பாய்! என்ன செய்து கொண்டிருப்பாய்! பாவம் சுடச்சுட நடுப்பகல் வெயிலில் தலையில் சோற்றுச் சட்டியைச் சுமந்து கொண்டு, அங்காடிச் சாவடிக்கு வந்து, எனக்குப் பரிமாறும் பணிப்பெண்ணாக இருந்திருப்பாய். பட்டமகிஷிபோல் உன்னை இப்போது வைத்திருக்கிறேன், பக்குவம் பெறவில்லையே, நீ. வியாபார முறையை மாற்றப்போகிறீர்களாமே நீங்கள்! வஞ்சனையை வாட்டி வதைத்து, கருணையை முடிசூட்டப் போகிறீர்களாமே. உங்கள் முதுகுக்குச் சூடிட மன்னன் கட்டளைப் பிறப்பிக்கப் போகிறான், ஜாக்ரதை, நாளை முதல் நீ அந்த நாசக்காரர்களுடன் சேராதே. நமக்கிருக்கும் மதிப்பைக் கெடுக்காதே. இந்த மண்டலத்தில் நான் வியாபாரம் செய்வது போலச் செய்து பொருள் திரட்டுபவர்கள் பலர் உண்டு. அதிலே பாதகம் இல்லை! வல்லவன் வாழ்வது இயற்கை. இதை மாற்ற முயலும் பேர்வழிகள் வெறும் வீணர்கள்! அரசன் அடங்காக் கோபம் கொண்டுள்ளான். நீ என் மனைவி என்பதை மறவாதே.

வணிகனுக்கு வாழ்க்கைப்பட்ட உனக்கு வாயாடி வேலை வேண்டாம்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/9&oldid=1638494" இலிருந்து மீள்விக்கப்பட்டது