பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மொழிப்போர்த் தீயைத் தமிழ்நாட்டில் மூளச்செய்த இவர் 1965இல் சிறைப்படுத்தப் பட்டார்; அதனால் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த அஞ்சல் துறைப் பணியை இழந்தார்; முப்பத்திரண்டு அகவையிலிருந்து முழுநேரத் தமிழ்ப்போராளியாகத் தமிழ்நாட்டை வலம் வரத்தொடங்கினார். இந்தி எதிர்ப்பு, மனுதரும எரிப்புக்கான சிறை வாழ்வு இவர் ஏற்றுக் கொண்டவை. 'மிசா', தடாச் சிறை வாழ்வு இவர் மீது திணிக்கப்பட்டவை. தொடர்ந்த உளவுத்துறை ஒற்றாடல்கள் இவரோடு உடனுறைந்தவை.

துரை. மாணிக்கம் என்பது இவரின் இயற்பெயர். பாவாணரைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட உலகத் தமிழ்க்கழகத்தின் முதல் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தவர். பாவாணாரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி உருவாகவும், தமிழக அரசுத்திட்டமாக அது ஏற்கப்படவும் வழிவகுத்தவர். ஐயை, பாவியக் கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு (மூன்று தொகுதி), எண் சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய இவரின் பாடல் நூல்கள் தனிச்சிறப்பு மிக்கவை.

தமிழுக்கு அரிய கருவூலமாய் அமைந்தது இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை.

தமிழ்மொழி மேம்பாட்டைச் சிந்திக்கும் எவரும் பெருஞ்சித்திரனாரின் எழுத்தையும் வாழ்வையும் சிந்தித்தே தீரவேண்டும்.

- செந்தலை ந. கவுதமன்

10

பாச்சோறு